“ஓபிஎஸ் வழியே என் வழி” - வெல்லமண்டி நடராஜன்

“ஓபிஎஸ் வழியே என் வழி” - வெல்லமண்டி நடராஜன்

திமுகவில் சேர மாட்டேன் என்றும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் தான் இறுதி வரை உறுதியாக இருப்பேன் என்றும் அவரது ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார்.

அவரைத் தொடர்ந்து, திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வெல்ல மண்டி நடராஜனும் திமுகவில் இணையப்போவதாக தகவல் பரவியது. இதுகுறித்து வெல்லமண்டி நடராஜனிடம் கேட்டபோது, ‘‘நான் திமுகவில் இணையமாட்டேன். நான் சென்னைக்கும் செல்லவில்லை; திருச்சியில் தான் உள்ளேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் தான் இறுதி வரை உறுதியாக இருப்பேன். அவர் எந்த முடிவு எடுத்தாலும், அது ஆணித்தரமான நிரந்தரமான முடிவாக இருக்கும். எனக்கு எந்தத் திட்டமும் இல்லை.

ஓபிஎஸ் பெரிய தலைவர், தொலை நோக்குடன் சிந்திப்பவர். அவர் நல்ல நிலைக்கு அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையில் பயணிக்கிறேன். ஒருவர் நல்லா இருக்கும்போது ஒட்டியிருப்பதும்; டல்லா இருக்கும்போது ஒதுங்கிச் செல்வதும் தவறு. அந்த நிலைப்பாடு என்னிடம் கிடையாது’’ என்றார்.