82 வயதிலும் மாறாத பாசம்.. மகளுக்கு 12-வது ஆண்டாக பொங்கல் சீர் கொண்டு சென்ற தந்தை!

82 வயதிலும் மாறாத பாசம்.. மகளுக்கு 12-வது ஆண்டாக பொங்கல் சீர் கொண்டு சென்ற தந்தை!

82 வயதிலும் தனது மகளுக்காக பொங்கல் சீர் வரிசையை சைக்கிளில் எடுத்துச் சென்ற தந்தையின் செயல் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழர்கள் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, பொங்கல் வைப்பது மட்டுமின்றி தமிழர்களின் பாரம்பரியமும், கலாச்சாரமுமாக உள்ள பொங்கல் சீர் கொடுக்கும் நிகழ்ச்சி பல்வேறு பகுதிகளும் நடைபெறும். குறிப்பாக, பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுப்பவர்கள் வீட்டிற்கு, பெண் வீட்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது தங்களது வசதிக்கேற்ப சீர் செய்வது வழக்கம்.

சில வீட்டில் திருமணமான முதல் ஆண்டும், சில வீட்டில் தங்களால் முடிந்தவரை சீர் கொடுப்பார்கள். அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள வடக்கு கொத்தக்கோட்டை கிராமத்தை சேர்ந்த 82 வயதான செல்லத்துரை அவரது மகளுக்கு தொடர்ந்து சீர் செய்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செல்லத்துரை - அமிர்தவள்ளி தம்பதிக்கு சுந்தராம்பாள் என்ற மகளும் முருகேசன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், மகள் சுந்தராம்பாளை சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்பு நம்பம்பட்டியில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். ஆனால், அவருக்கு 12 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து, இரட்டை குழந்தை பிறந்துள்ளது.

பேரக்குழந்தைகள் பிறந்த தினம் முதல் இன்று வரை பாரம்பரியமும், கலாச்சாரமும் மாறாமல் இருக்கவும், மகள் மீது கொண்ட பாசத்தாலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது சீர்வரிசையை வழங்கி வருகிறார். அதன்படி, தற்போது வரை 12 ஆண்டுகளாக சீர் செய்துள்ளார்.

குறிப்பாக, 82 வயதிலும் அவரது மிதிவண்டியில் விவேகானந்தர் காலண்டர், தேங்காய் பழம், மஞ்சள் கொத்து, வேட்டி துண்டு, பொங்கல் பூ, பச்சரிசி, வெல்லம், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொங்கல் சீரை வைத்துக்கொண்டு, ஐந்து கரும்புகளை தலையில் சுமந்து கொண்டு சென்று வருகிறார். இப்படி, வடக்கு கொத்தக்கோட்டை பகுதியிலிருந்து சுமார் 17 கி.மீ தூரம் 16 வேகத்தடைகளை கடந்து நம்பம்பட்டி வரை சைக்கிளிலேயே அவர் பொங்கல் சீர் கொண்டு செல்வதை சாலை நெடுகிலும் உள்ள மக்கள் கண்டு வியப்பதோடு, கைகளை காட்டி பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றனர்.

தமிழர்களின் பாரம்பரியமும், கலாச்சாரமும் அழியாமல் முதுமையிலும் மகளுக்கு சைக்கிளில் சீரெடுத்து செல்லும் தந்தையின் செயல் பார்ப்பவர்களை பரவசமடைய செய்கிறது. இதனால், கொத்தக்கோட்டை வர்த்தகர்கள் சார்பில் மகளுக்கு சீர் எடுத்துச் செல்லும் செல்லத்துரைக்கு விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது.