மகளிர் பிரீமியர் லீக் 2026: பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நவி மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணியின் தொடக்க வீராங்கனை கிரண் நவ்கிரே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் மெக் லெனிங் - போப் லிட்ச்ஃபீல்ட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் லிட்ச்ஃபீல்ட் 27 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
மறுபக்கம் சிறப்பாக விளையாடிய மெக் லெனிங் தனது அரைசதத்தைப் பதிவு செய்த நிலையில், 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 54 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய ஹர்லீன் தியோலும் 47 ரன்களைச் சேர்த்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்ப, அடுத்த வந்த வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர்.
இதன் காரணமாக யுபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மரிஸான் கேப் மற்றும் ஷஃபாலி வர்மா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணிக்கு ஷஃபாலி வர்மா - லிசெல் லீ இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர்.
இதில் லிசெல் லீ தனது அரைசதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஷஃபாலி வர்மா 36 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து அரைசதம் கடந்து விளையாடி வந்த லிசெல் லீயும் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 67 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
மேற்கொண்டு அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த லாரா வோல்வார்ட் 25 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.