தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுத்த பொதுமக்கள்! ஸ்தம்பித்தது ஜிஎஸ்டி சாலை!

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுத்த பொதுமக்கள்! ஸ்தம்பித்தது ஜிஎஸ்டி சாலை!

தீபாவளி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்துள்ளது.

நாடு முழுவதும் வரும் 20 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பமாக சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முதல் சென்னையில் தங்கி படித்து வரும் மாணவ, மாணவிகள், பணிபுரிபவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள், அரசு சிறப்புப் பேருந்துகள் மற்றும் தங்கள் சொந்த வாகனங்களில் தென் மாவட்டங்கள் மற்றும் பல்வேறு நகரங்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

இதனால் இன்று காலை முதல் சென்னை தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், வண்டலூர், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதிகளை இணைக்கும் ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் சொந்த வாகனங்களில் தாம்பரம், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் ஆடை, பட்டாசுகள், இனிப்புகள் வாங்குவதற்கும் குவிந்துள்ளனர். இந்நிலையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான வாகனங்கள் ஜிஎஸ்டி சாலைக்கு வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.

இதனால் தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல் துறையினர் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை சனிக்கிழமை, ஞாயிறு, திங்கள் என அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் இன்று மாலை முதல் மேலும் அதிகப்படியான பயணிகள் ரயில்கள், சிறப்பு பேருந்துகள் மற்றும் தங்கள் சொந்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே சொந்த வாகனங்களில் வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க ஓ.எம்.ஆர் சாலை, கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்துமாறு போக்குவரத்து காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இன்று மாலை முதல் ஜிஎஸ்டி சாலையில் கூடுதல் போக்குவரத்து போலீசார் பணியமர்த்தப்பட்டு, போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.