பென்னிகுயிக் உறவினர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த மதுரை விவசாயிகள்

பென்னிகுயிக் உறவினர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த மதுரை விவசாயிகள்

மேலூர் வந்த பென்னிகுயிக் உறவினர்களுக்கு விவசாயிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாய தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் உதவும் வகையில், பென்னிகுயிக் முல்லைப் பெரியாறு அணையை கட்டினார். இவரது பிறந்தநாளை விவசாயிகள் திருவிழாவாக கொண்டாடுவது வழக்கம்.

இந்த நிலையில், தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பொறியாளர் பென்னிகுயிக் உறவினர்கள் மதுரை மாவட்டம் மேலூருக்கு வருகை தந்தனர். அவர்களுக்கும், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மேயருக்கும் மதுரையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அந்த வகையில், இங்கிலாந்து நாட்டில் உள்ள கேம்பரலீ மாநகர மேயர் லூயிஸ் ஆஸ்பரிக் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் மதுரை வந்திருந்தனர். முல்லைப் பெரியாறு அணை கட்டிய கர்னல் பென்னிகுயிக் பிறந்த பகுதியிலிருந்து வந்த இவர்களுக்கு மேலூர் ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், மேலூர் பென்னிகுயிக் பேருந்து நிலையம் முன்பு பொய்க்கால் குதிரை ஆட்டம், தப்பாட்டம், ஜல்லிக்கட்டு காளை என உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து, பென்னிகுயிக் 185ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பேருந்து நிலையம் முன் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். பிறகு, பென்னிகுயிக் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர்.

மேலும், அங்கிருந்து ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக மேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு, அங்கும் வெளிநாட்டினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது, பொய்க்கால் குதிரை ஆட்டம், மாணவர்களின் சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை உற்சாகமாக ரசித்துப் பார்த்த வெளிநாட்டினர் அவர்களுடன் இணைந்து நடனமாடியும் மகிழ்ந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கேம்பரலீ மேயர் லூயிஸ் ஆஸ்பரிக், "மதுரை மக்களின் அன்பு ஆர்ப்பரிக்கும் வகையில் இருக்கிறது. தற்போதுவரை பென்னிகுயிக்கை மறக்காமல் வணங்கி வருகின்றனர். அது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. மேலும், பென்னிகுயிக் அவர்களுக்கு மேலூர் பேருந்து நிலையம் முன்பு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் முன்வைக்கும் நிலையில், அதனை தானும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்தார்.