பயிருக்கு காவல் காத்த விவசாயி காட்டு யானை தாக்கி பலி... பொங்கல் தினத்தன்று சோகம்

பயிருக்கு காவல் காத்த விவசாயி காட்டு யானை தாக்கி பலி... பொங்கல் தினத்தன்று சோகம்

தைப்பொங்கல் தினமான இன்று பயிருக்கு காவல் காத்திருந்த விவசாயி காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலைப்பகுதி காடகநல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சித்துராஜ். இவரது தோட்டத்தில் மக்காச்சோளம், ராகி உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்ட நிலையில், தினமும் இரவில் வனவிலங்குகளிடமிருந்து பயிர்களை காப்பதற்காக காவல் பணி மேற்கொள்வது வழக்கம்.

இந்த நிலையில், விவசாயி சித்துராஜ் தனது தோட்டத்தில் காவல் பணி மேற்கொண்ட போது அங்கு வந்த காட்டு யானை பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. இதை கண்ட சித்துராஜ் சத்தம் போட்டு யானையை விரட்ட முயற்சித்து உள்ளார். அப்போது அந்த காட்டு யானை ஆக்ரோஷமாகி உள்ளது. தொடர்ந்து விவசாயி சித்துராஜை துரத்திய காட்டு யானை தும்பிக்கையால் அவரை தாக்கியும், காலால் மிதித்தும் உள்ளது. இதில் நிலைகுலைந்த விவசாயி சித்துராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த கடம்பூர் வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதன் பின்னர் விவசாயி சித்துராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகை தினத்தன்று பயிருக்கு காவல் இருந்த விவசாயி காட்டு யானை தாக்கி பலியான சம்பவம் கடம்பூர் மலைப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.