தமிழகத்தில் நாளை வெளுத்து வாங்கப் போகும் கனமழை!

தமிழகத்தில் நாளை வெளுத்து வாங்கப் போகும் கனமழை!

தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மார் கடலோரப்பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று, வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் - மியான்மார் கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு-வடமேற்கு திசையில், மியான்மார் - பங்களாதேஷ் கடற்கரையை ஒட்டி நகரக்கூடும்.

அதேபோல, ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஒன்று நிலவுகிறது. இதனால், இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை (நவ.5) வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் (நவ.6) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு

இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இன்றும், நாளையும் மத்தியகிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள், வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 - 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.