அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு: 22 காளைகளை அடக்கி காரை தட்டிச்சென்ற பாலமுருகன்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு: 22 காளைகளை அடக்கி காரை தட்டிச்சென்ற பாலமுருகன்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசாக நிஸான் காரை வலையங்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் தட்டிச் சென்றுள்ளார்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதில் மதுரை மாவட்டத்தில் நடைபெறுகிற ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரசித்தமானவை. இந்த ஆண்டு முதல் நாள் ஜல்லிக்கட்டு போட்டியானது அவனியாபுரத்தில் தொடங்கியது. இந்த போட்டியை அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 986 காளைகள் போட்டியில் பங்கேற்க கொண்டுவரப்பட்டன. அவைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, 47 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, 939 காளைகள் போட்டியில் பங்கேற்றன.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க பல்வேறு ஊர்களிலிருந்தும் 578 ஜல்லிக்கட்டு வீரர்கள் வந்திருந்தனர். அவர்களில் 11 பேர் உடல் தகுதி சுற்றில் தகுதி இல்லாத காரணத்தால் நீக்கப்பட்டனர். இதனையடுத்து 564 பேர் தகுதி பெற்று களத்தில் இறங்கினர்.

ஒவ்வொரு சுற்றிலும் தலா 50 வீரர்கள் களமிறங்கினர். ஒரு மணிநேரத்தில் 80 முதல் 90 காளைகள் வரை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட நிலையில், சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் துணிச்சலுடன் தழுவி பிடித்தனர். 11 சுற்றுகளாக போட்டி நடைபெற்ற நிலையில், ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளை பிடித்தவர்கள் இறுதிச்சுற்றில் பங்கேற்றனர்.

இன்று நடந்து முடிந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வலையங்குளத்தை சேர்ந்த பாலமுருகன் 22 காளைகளை பிடித்து, முதல் பரிசான நிஸான் காரை தட்டிச் சென்றார். 17 காளைகளை பிடித்து இரண்டாம் பரிசான பைக்கை அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்தி பெற்றார். சிறந்த காளைக்கான பரிசாக விருமாண்டி சகோதரர்களின் காளைக்கு டிராக்டரும், ஜி.ஆர் கார்த்திக்கின் காளைக்கு தங்க நாணயமும் கிடைத்தது.

இரண்டாம் பரிசு பெற்ற கார்த்தி

இதுபோக, ஒவ்வொரு சுற்றிலும் வெற்றிபெற்ற வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், வெள்ளிப் பொருட்கள் என பல பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

நாளை பாலமேட்டில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். அதேபோன்று நாளை மறுநாள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.