'கல்லூரி வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவியுங்கள்' - மாணவர்களுக்கு சண்முக பாண்டியன் அறிவுரை

'கல்லூரி வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவியுங்கள்' - மாணவர்களுக்கு சண்முக பாண்டியன் அறிவுரை

கல்லூரி வாழ்க்கையை மிக சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு நடிகர் சண்முக பாண்டியன் அறிவுரை கூறியுள்ளார்.

திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரியில் கலை திருவிழா நடந்தது. இதில் 'கொம்பு சீவி' திரைப்படத்தின் நாயகன் சண்முக பாண்டியன், நடிகர் சரத்குமார் திரைப்படத்தின் இயக்குநர் பொன்ராம் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் கலந்து கொண்ட சண்முக பாண்டியன் பேசியதாவது:

முதன்முதலில் கல்லூரி விழாவில் கலந்து கொள்கிறேன். கொம்பு சீவி திரைப்படத்தின் பிரமோஷனுக்காக பல இடங்களுக்கு செல்லும் நிலையில் கல்லூரி நிகழ்வில் கலந்து கொள்வது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நானும், கலை அறிவியல் கல்லூரியில் தான் பயின்றேன். சென்னையில் இருக்கும் லயோலா கல்லூரியில் விஸ்காம் பயின்றேன். கல்லூரி வாழ்க்கையை மிக சந்தோஷமாக அனுபவியுங்கள். இந்த வாழ்க்கையை முடித்து விட்டு வேலைக்கு போகின்ற போது இதை அனுபவிக்கவில்லை என்றால் மிகவும் வருத்தப்படுவோம்.

நன்றாக படிப்பை முடித்து ஒரு டிகிரி பெற வேண்டும். நல்ல நண்பர்கள் கல்லூரியில் தான் அதிகம் கிடைப்பார்கள். அவர்களை சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். கொம்பு சீவி திரைப்படத்தை நண்பர்களோடு சேர்ந்து திரையரங்கிற்கு சென்று பார்த்துவிட்டு உங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்" என்றார்.

நடிகர் சரத்குமார் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோர் பேசிய போது கல்லூரி மாணவ மாணவிகள் கைகட்டி, விசில் அடித்து தங்களது ஆரவாரத்தை வெளிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து நடிகர் சரத்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில், ''எனக்கு பின்னால் இருப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதால் தான் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனாலும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும்.

நடிகர் விஜயின் நிலைப்பாடு குறித்து, நான் எதுவும் கூற முடியாது. அவரது வளர்ச்சிக்காக நான் பேச முடியாது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் நிலைப்பாடு குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. அவருக்கு நான் அறிவுரைகளும் வழங்க முடியாது. அவர் வளர்ந்த நடிகர்.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டு இருந்தாலும். வேலை நாட்கள் 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இதைப் பற்றி பேசுவோம். மேலும் விஜயை விட பெரிய அரசியல் கட்சியினர் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் குறித்து கேள்வி எழுப்பினால், பதில் அளிக்க தயாராக உள்ளேன். கஞ்சா புழக்கத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக திரைப்படத்தை எடுத்துள்ளோம்'' என்றார்.