புட்டபர்த்தி பாபாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் - டிரெய்லரை வெளியிட்டார் துர்கா ஸ்டாலின்
புட்டபர்த்தி பாபாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட ’அனந்தா’ திரைப்பட டிரெய்லரை துர்கா ஸ்டாலின் வெளியிட்டார்.
புட்டபர்த்தி பாபாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட ’அனந்தா’ திரைப்படத்தை பாட்ஷா, அண்ணாமலை, பாபா போன்ற படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். மேலும் தேவா இசையமைத்து, நடிகர்கள் நிழல் ரவி, தலைவாசல் விஜய், சுஹாசினி, ஒய்.ஜி.மகேந்திரன், அபிராமி உள்ளிட்டோரது நடிப்பில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு திரைப்படத்தின் டிரெய்லர் பதிவை வெளியிட, புட்டபர்த்தி பாபா அறக்கட்டளை நிர்வாகி ரத்னாகர், திரைப்படக் குழுவினரான இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, இசையமைப்பாளர் தேவா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து விழா மேடையில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பேசுகையில், ”கலைஞர் அவர்களுடன் எனக்கு மிகுந்த நெருங்கிய பழக்கம் உண்டு, அவருடன் இணைந்து ’இளைஞன்’ படத்தில் பணி புரிந்தேன். அந்த அனுபவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தினமும் காலை அல்லது மாலை இருவேளைகளில், படத்தின் தயாரிப்பு சமயத்தில் அவருடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சூழலில் ஒரு வசனத்தினை எழுதிக் கொடுத்து இருந்தார்.
இருப்பினும் எனக்கு அதில் உடன்பாடு இல்லாததால், அவரின் உதவியாளரிடம் இதைப்பற்றி கலைஞரிடம் கேட்கலாமா என கேட்டேன். அவரும் கேளுங்கள் என கூறினார். பின்னர் நான் கேட்ட போது, அவர் பேனாவினை மூடி புள்ளி வைத்து விட்டார். கேட்ட சமயத்தில் அறை முழுவதும் நிசப்தமாக இருந்தது, அனைவரும் அமைதியாக இருந்தனர். நான் என்னுடைய கதை முடிந்து விட்டது என பயத்தில் இருந்தேன்.
ஒரு இயக்குநர் என்ற முறையில் நான் படத்தின் கதை, வசனம் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தபோது, கலைஞர் மறுப்பே தெரிவிக்காமல், ஒரு இயக்குநர் என்றால் அவர் தான் படத்தின் தலைமை என்று கூறி உடனடியாக கதை வசனத்தை மாற்றிக் கொடுத்தார்.
மேலும் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், எனக்கும் ஒரு சுவாரசியமான நிகழ்வு நடந்திருக்கிறது. அதாவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ’சங்கமம்’ திரைப்படத்தின் போது என்னையும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானையும் தொலைபேசி வாயிலாக அழைத்து திரைப்படம் நன்றாக உள்ளது வாழ்த்து தெரிவித்தார்” என்று கூறினார்.