கரூரில் கமல்ஹாசன்... உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்த பிறகு கூறியது என்ன?

கரூரில் கமல்ஹாசன்... உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்த பிறகு கூறியது என்ன?

பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து உயிர் பலி குறைவுக்கு காரணமான செந்தில் பாலாஜியை பாராட்ட வேண்டும் என கமல்ஹாசன் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்.27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார். அப்போது விஜய் பேசிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தேசிய அளவில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இத் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுடைய குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.10 லட்சம் நிதி வழங்கியது.

அதே போல, தவெக சார்பில் உயிரிழந்தவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பிலும் தலா ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்திற்கு மொத்தமாக 1 கோடி நிவாரண நிதி நேரடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை சந்தித்து வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எம்பி, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க இன்று கரூர் வருகை தந்தார். அதன் பின்னர் ஏமூர் புதூர், வேலுச்சாமிபுரம், தான்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது, உயிரிழந்த 41 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் மொத்தம் 41 லட்சம் ரூபாய் நிதி உதவியை நேரடியாக வழங்கினார்.

ஊடகங்களுக்கு பாராட்டு

இதனைத் தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் சேர்ந்து கமல்ஹாசன் நேரடியாக பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், '' கரூர் சம்பவத்தை ஆதாரங்களுடன் வெளியிட்டு மக்களுக்கு உண்மையை வெளிக் கொண்டு வந்த பங்கு ஊடகங்களுக்கு உண்டு.

செந்தில் பாலாஜிக்கு பாராட்டு

இது சம்பந்தமாக விசாரணை நடைபெற்று வருகிறது. சதி திட்டம் குறித்து நாம் பேச வேண்டியது இல்லை. சட்டமும், நீதியும் அதை பார்த்துக் கொள்ளும். விரைவாக மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து உயிர் பலி குறைவுக்கு காரணமான செந்தில் பாலாஜியை பாராட்ட வேண்டும். கட்சி பேதமை பார்க்காமல், சட்டத்தை மட்டுமே நடைமுறைப்படுத்தும் ஒரு முதலமைச்சராக செயல்பட்ட திமுக தலைவரை இந்த நேரத்தில் எண்ணி பெருமை கொள்கிறேன், நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழக முதல்வருக்கு ஒரே ஒரு வேண்டுகோள். அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கூட்டம் நடத்த, பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் ஒதுக்குப்புறமாக தனி இடம் ஒன்றை ஒதுக்கி தர வேண்டும் என வேண்டுகோள் வைக்கின்றேன். தமிழ்நாடு எப்படி முன்னுதாரணமாக மற்ற மாநிலங்களுக்கு உள்ளதோ? அது போல, அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்த தனியிடம் மேற்கொண்டால் அனைத்திலும் தமிழகம் முன்னுதாரணமாக திகழும்.

லைட் ஹவுஸ் கார்னர் பகுதியிலும் விபத்து நடக்கலாம்

தமிழக வெற்றிக் கழகம் கூட்டம் நடத்த கோரிய லைட் ஹவுஸ் கார்னர் அமராவதி ஆற்றுப்பாலம் அருகே உள்ளது. அந்த இடத்தில் வழங்கியிருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என கூற முடியாது. இனிவரும் காலங்களில் இது போன்று எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறக்கூடாது.'' என்றார்.

கரூர் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்க முடியுமே என்று எடப்பாடி பழனிசாமி கூறியதை குறித்து கேட்டதற்கு, '' இது அரசியல் பேசும் நேரம் அல்ல, மனிதாபிமானம் குறித்து பேசும் நேரம். அதிமுக பேசுவது அரசியல். அனைத்து கட்சிகளும் அமர்ந்து இதில் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.'' என தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியது குறித்து கேட்டதற்கு, '' எவ்வளவு நிதி உதவி கொடுத்தாலும் இழந்த உயிரை மீட்டு தர முடியாது. அவர்களுக்கு நாம் பெற்று தர வேண்டியது நீதி மட்டும் தான்'' என்றார்.