'பூத சுத்தி விவாகம்' முறையில் நடைபெற்ற நடிகை சமந்தா திருமணம் - அப்படி என்றால் என்ன தெரியுமா?
நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் இயக்குநர் ராஜ் நிதிமொரு திங்கட்கிழமை (டிச.1) காலை கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்க பைரவி சன்னதியில் 'பூத சுத்தி விவாகம்' (Bhuta Shuddhi vivaha) என்ற யோக திருமண சடங்கு முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், திருமணத்தின் புகைப்படங்களை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதன் பின்னர் இணையத்தில் சமந்தாவின் உடை, மோதிரம், தாலி, திருமண முறை குறித்த விவாதமும் ஆர்வமும் மக்களிடையே எழுந்தன.
சமந்தா பகிர்ந்த புகைப்படங்களில், இயங்குநர் ராஜ் நிதிமொரு லிங்க பைரவி தேவியின் முன்னிலையில் சமந்தாவிற்கு மோதிரம் அணிவித்தார். தென்னிந்திய திருமணம் முறைப்படி சிவப்பு நிற புடவையில் கோல்டன் நிறத்தில் எம்ராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட புடவையை அவர் அணிந்திருந்தார்.
இப்படி ஆரம்பர உடைகள், மோதிரம் போன்றவற்றை தாண்டி கவனம் ஈர்த்த மற்றொரு விஷயம் அவர் செய்த திருமணம் முறை. அதாவது, 'பூத சுத்தி விவாகம்' முறையில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ சமந்தா மற்றும் ராஜ் நிதிமொரு தம்பதியினருக்கு திருமணம் நடந்தது.
அதென்ன 'பூத சுத்தி விவாகம் முறை?
இந்த பூத சுத்தி திருமணம் முறை என்பது யோக விஞ்ஞானமும் ஆன்மீகத்தையும் நம்பிக்கையாகக் கொண்டவர்கள் தேர்வு செய்யும் ஒரு தெய்வீக திருமண முறையாக கருதப்படுகிறது. லிங்க பைரவி சன்னதிகளிலோ அல்லது தம்பதியினர் தேர்ந்தெடுக்கப்படும் இடங்களில் இந்த முறை செய்யப்படுகிறது.
பூத சுத்த திருமணத்தை நடத்துவதற்கு சிறப்பு பயிற்சி பெற்ற 'சுமங்கலா' எனப்படும் தன்னார்வத் தொண்டர்கள் உள்ளனர். இவர்கள் தான் திருமணத்தை நடந்துகின்றனர். சமந்தா பகிர்ந்த புகைப்படத்திலும் ஒரு பெண் திருமண சடங்குகளை செய்வது தெரிகிறது.
இந்த திருமண முறையில் மணப்பெண் சிவப்பு நிற புடவை மட்டும் தான் அணிவார்கள் என ஈஷா மையத்தின் இணைத்தளத்தில் பகிர்ந்த புகைப்படங்களில் இருந்து தெரிகிறது. பூத சுத்தி திருமணம் முறை என்பது, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம் எனப்படும் ஐந்து கூறுகளையும் சமநிலைப்படுத்தும் பழமையான யோக நடைமுறையை அடிப்படையாக கொண்டது என ஈஷா அறக்கட்டளை தளத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த பூதசுத்தி மரபில், திருமண தம்பதியினர் தங்களுக்குள் இருக்கும் ஐந்து கூறுகளையும் சுத்திகரித்து தங்கள் உடலை சமநிலைப்படுத்துவதைக் குறிக்கிறது. உடலும், மன ஆற்றலும் திருமணத்திற்குப் பிறகு இணக்கமாக இருக்க இந்த பூஜை முறை செய்யப்படுவதாக ஈஷா இணையத்தள பதிவுகள் கூறுகின்றன.
யார் செய்யலாம்? இந்த முறையை திருமணமாகாதவர்களும், ஏற்கனவே திருமணமான தம்பதியனர், தென்னிந்திய பாரம்பரியத்தை போல் 60 அல்லது 80ம் கல்யாணம் செய்ய நினைப்பவர்களும் பூதசுத்தி மரபில் திருமணம் செய்யலாம் என ஈஷா இணையத்தில் உள்ளது. ஆனால், பெண்கள் கர்ப்பமாக இருந்தால் இந்த சடங்கு செய்யக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.
இந்த திருமண முறையில் தேவியின் உருவம் பொதிந்த டாலர் அல்லது பெண்டண்ட் அணியப்படுவது கட்டாயம். சமந்தா பகிர்ந்திருந்த புகைப்படத்தில், கருப்பு மணிகளால் ஆன பெண்டண்ட் தாலியாக அணிந்திருந்தார். கூடவே, மஞ்சள் கயிறும் அணிந்திருந்தார்.