இந்தக் காலத்திற்கு ஏற்ப படங்களை இயக்கி வருகிறார்! தனுஷ் குறித்து கஸ்தூரிராஜா பெருமிதம்!

தனுஷ் இந்தக் காலத்திற்கு தேவையான திரைப்படங்களை எடுத்து வருகிறார் என இயக்குநர் கஸ்தூரிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரிராஜா இன்று சாம கோடாங்கி திரைப்படம்
உருவாக உள்ள சேலம் மாவட்ட கிராமங்களை பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “இட்லி கடை திரைப்படம் நன்றாக உள்ளது. குடும்பத்தின் உறவுமுறைகளை தனுஷ் நன்றாக சொல்லி இருக்கிறார். மண்வாசனை அடிப்படையிலான திரைப்படம் தவிர வேறு எதுவும் நான் எடுத்ததில்லை. ஆனால் அவர் இந்த வயதில் நமது பாரம்பரியம் குறித்து அவ்வளவு தெரிந்து வைத்துள்ளது ஆச்சரியமாக உள்ளது.
முன்பு ராயன் என்ற திரைப்படம் எடுத்தார். பின்னர் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், தற்போது 'இட்லி கடை’ எடுத்துள்ளார். நான் ஒரே மாதிரியாக கிராமத்து திரைப்படமாக எடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் தனுஷ் இந்தக் காலத்திற்கு தேவையான திரைப்படங்களை எடுத்து வருகிறார்” என்றார்.
தொடர்ந்து பேசிய கஸ்தூரி ராஜா, விரைவில் சேலத்தை மையமாகக் கொண்டு ’சாமக் கோடாங்கி’ என்ற திரைப்படம் தொடங்கப்படும். கதைக்கு தேவையான நிறைய விவரங்கள் சேகரித்து கொண்டு இருக்கிறோம். தமிழ்நாட்டிற்கு பொதுவான நபர்கள் ’சாம கோடாங்கி’. என்னுடைய திரைப்படத்தில் கதை தான் நாயகன், நாயகி. இப்படத்தில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும். மேலும் பிரபலமான நடிகர்களும் இதில் இருப்பார்கள், நானும் படத்தில் இருப்பேன்” என்றார்.
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு குறித்து கேட்ட போது, “கரூர் சம்பவத்தை, சம்பவமாகத் தான் பார்க்கிறேன். அது நமது சக்திக்கு அப்பாற்பட்ட விஷயம். தமிழர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வாக இருந்தால் கூட அதைப்பற்றி நாம் விமர்சிக்க கூடாது. மக்களுக்கு தெரியாதது நமக்கு என்ன தெரியப் போகிறது, அவங்களுக்கு எல்லாமே தெரியும்” என்றார்.
தமிழ் சினிமாவில் சிறிய படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, ”தமிழ் சினிமாவில் குற்றச்சாட்டு அனைவரும் வைக்கின்றனர். எடுக்கின்ற படத்தை சரியாக எடுத்தால் திரையரங்குகள் கிடைக்கும், நமது வேலையை நாம் ஒழுங்காக செய்தால் எல்லாமே கிடைக்கும். மற்றவை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். பெரிய திரைப்படங்கள் வருகின்ற போது திரையரங்குகள் கிடைப்பது கடினம். ஆனால் பல சிறிய திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. அனைவரது மனதைத் தொடும் வகையில் திரைப்படம் எடுத்தால், சிறிய திரைப்படம் பெரிய திரைப்படம் என்று வித்தியாசம் இல்லாமல் வெற்றி பெறும்” என்று கூறினார்.