‘இப்படியும் ஒரு ரன் அவுட்!’ - விசித்திரமாக ஆட்டமிழந்த அபிமன்யு ஈஸ்வரன்

‘இப்படியும் ஒரு ரன் அவுட்!’ - விசித்திரமாக ஆட்டமிழந்த அபிமன்யு ஈஸ்வரன்

ரஞ்சி ட்ராபி 6-வது சுற்றுப்போட்டிகள் நடைபெறும் நிலையில் , பெங்கால் அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 81 ரன்களில் அபாரமாக ஆடி , ரன் அவுட் ஆன சம்பவம் பேசு பொருளாகியுள்ளது. 

கொல்கத்தா அருகேயுள்ள கல்யாணியில் பெங்கால் அணி, சர்வீசஸ் அணிக்கு எதிராக ஆடி வருகிறது. இதில் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 81 ரன்களில் அற்புதமாக ஆடி வந்த நிலையில், அவர் தன் 28-வது முதல் தர கிரிக்கெட் சதத்தை எடுப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்த்த போது எதிர்பாராவிதமாக ஏதோ மூளை குழப்பத்தில் அவர் விசித்திரமாக ரன் அவுட் ஆனார்.

ஆட்டத்தின் 41-வது ஓவரை சர்வீசஸ் அணியின் ஆதித்ய குமார் வீச பெங்கால் அணியின் பேட்டர் சுதிப் சாட்டர்ஜி ஒரு ஃபுல் லெந்த் பந்தை நேராக பவுலரிடமே அடித்தார். அப்போது ஓவர் முடிந்து விட்டது, டிரிங்க்ஸ் இடைவேளை அறிவிக்கப்பட்டது என்ற தவறான எண்ணத்தில் பந்து இன்னும் ‘டெட்’ ஆகாத நிலையில் அபிமன்யு ஈஸ்வரன் கிரீசிலிருந்து வெளியேறி டிரிங்க்ஸ் நோக்கி நடக்க ஆரம்பித்தார். ரன் எடுக்க நிச்சயமாக முயலவில்லை. ஆனால், பந்து என்ன ஆனது என்றால் பவுலர் ஆதித்ய குமார் விரல்களில் பட்டு ரன்னர் முனை ஸ்டம்பைத் தாக்கியது.

அப்போது ஈஸ்வரன் கிரீஸுக்கு வெளியே ஸ்தம்பித்து நின்று விட்டார். சர்வீசஸ் வீரர்கள் முறையீடு எழுப்ப கள நடுவர்கள் தீர்ப்பை மூன்றாம் நடுவருக்கு அனுப்பினார். அவர் அவுட் என்று தீர்ப்பளிக்க அபிமன்யு ஈஸ்வரன் தன் தவறை உணர்ந்தார்:

“இன்னிங்ஸ் நன்றாகவே சென்று கொண்டிருந்தது. ஆனால் நான் செய்த தவறு என்னையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டது. விளையாட்டு உணர்வின் அடிப்படையில் எதிரணியினர் என்னை திரும்பி அழைத்து பேட் செய்ய சொல்லியிருக்கலாம் என்று பலரும் கருதலாம். ஆனால், அந்தக் கேள்விக்கே இடமில்லை. தவறிழைத்தேன் அவுட் அவ்வளவுதான். முழுதும் என்னுடைய தவறு அது.” என்று நேர்மையாக ஒப்புக் கொண்டார்.

2011-ம் ஆண்டு தோனி கேப்டன்சியில் இங்கிலாந்து பயணம் செய்த போது இயன் பெல் இப்படித்தான் பந்து ‘டெட்’ ஆகிவிட்டது என்று நினைத்து கிரீசை விட்டுக் கிளம்பி ரன் அவுட் ஆனார். அப்போது தேநீர் இடைவேளை நேரம். அப்போது இந்திய அணியும் அப்பீல் செய்தது. ஆனால் கேப்டன் ஸ்ட்ராஸ் தலையிட்டதன் பேரில் பெல் மீண்டும் இன்னிங்ஸைத் தொடர இந்திய கேப்டன் தோனி அனுமதித்தார். ஆனால், இப்போது கிரிக்கெட் ஆடப்படும் விதமும் வேகமும் வேறு, வீரர்களின் மனநிலையும் வேறாக மாறிவிட்டது.