மதுராந்தகத்தில் தேஜகூ பொதுக் கூட்டம் - பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் நரேந்திர மோடி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், அதிமுக, பாஜகவுடன் அன்புமணியின் பாமக அணி, அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இணைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் விதமாக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் தற்போது நடைபெற்ற வருகிறது.
இதில் பங்கேற்று உரையாற்றுவதற்காக பிரதமர் மோடி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக தலைவர் டிடிவி. தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் ஏராளமானோர் மதுராந்தகத்தில் திரண்டுள்ளனர்.
15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு: பிரதமர் வருகையை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்புடன் காவல் துறையின் முழுமை யான கட்டுப்பாட்டில் உள்ளது. பாதுகாப்பு பணியில் 15,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் இருந்து... - கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு அவரை, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர்.
பிரதமர் மோடியின் பதிவு: தமிழகம் வருவதை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘‘தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது!
மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன’’ என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.