பாஜக – அதிமுக மூழ்கும் கப்பல்.. அதில் ஏறினால் மரணம்தான்!

பாஜக – அதிமுக மூழ்கும் கப்பல்.. அதில் ஏறினால் மரணம்தான்!

அதிமுக ஒரு மூழ்கும் கப்பல், அதில் ஏறி பயணிப்பவர்கள் அனைவரும் மூழ்குவார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்று வரும் 49வது புத்தக கண்காட்சியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பார்வையிட்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புத்தகங்களை வெறும் காகிதங்களாகப் பார்க்காமல், ஒரு அறிவு ஆயுதமாக பார்க்க வேண்டும் என்றும், வாசிப்பு பழக்கம் கல்வித்துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.

தமிழ்நாட்டை உத்தரப்பிரதேசத்தோடு ஒப்பிடும் அறிவு ஜீவிகள் இங்கே வந்து இந்த கூட்டத்தைப் பார்க்க வேண்டும் என்று கடுமையாக  சாடியவர், தமிழ்நாட்டில் அறிவுத்திறன் வாய்ந்த அறிவாளிகள் இருப்பதால் தான் இத்தனை பேர் வந்து புத்தக கண்காட்சியை பார்வையிடுவதாக தெரிவித்தார். தொடர்ந்து அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்தவர் தேசிய ஜனநாயக கூட்டணியை கடுமையாக விமர்சித்தார்.

பாஜக, அதிமுக, அமமுக கூட்டணி குறித்து பேசியவர், தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட இயற்கைக்கு முரணான கூட்டணி என்றதுடன், நேற்று வரை ஒருவரை ஒருவர் துரோகி என்று கூறிக்கொண்டவர்கள், இப்போது இணைந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

கல்வித்துறைக்கான ரூ.3,400 கோடி நிதியை மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தருவோம் என்று அடம் பிடிக்கும் பாஜக அரசு, எப்படி தமிழக மக்களிடம் வாக்கு கேட்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து ஒடிசாவிற்கு சென்றால் தமிழ்நாட்டு மக்களிடம் தான் ஒடிசாவின் கஜானா சாவி இருக்கின்றது எனவும், பீகாருக்கு சென்றால் பீகாரிகளை தமிழ்நாட்டு மக்கள் வஞ்சிக்கிறார்கள் என்றும், இப்படி எல்லாம் பேசிவிட்டு தமிழ்நாடு மக்கள் யாரும் விவரம் இல்லாதவர்கள், மறந்துவிடுவார்கள்  என நினைத்து மீண்டும் நமக்கு வாக்களிப்பார்கள் என்று மிகப்பெரிய பேராசையோடு படையெடுத்து வருவதாக பிரதமர் மோடியை சாடினார்.

பிரதமர் மோடி எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும், பாஜக – அதிமுக கூட்டணி என்பது ஒரு மூழ்கும் கப்பல் என்றும், அதில் ஏறுபவர்களும் சேர்ந்து மூழ்குவார்கள் என்றும் கடுமையாகத் விமர்சித்தார்.