தலைநகர் டெல்லியில் மழை: இமாச்சல், ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவு

தலைநகர் டெல்லியில் மழை: இமாச்சல், ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவு

தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இன்று (ஜன.23) காலை மிதமான மழை பதிவானது. தற்போது அங்கு குளிர்காலம். இருப்பினும் அடுத்த சில மணி நேரத்துக்கு மழைப் பொழிவு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லி, நொய்டா மற்றும் காசியாபாத்தில் பரவலாக மழை பெய்தாலும்கூட டெல்லியில் காற்றின் தரம் 300+ AQI உடன் ‘மிக மோசம்’ என்ற நிலையில் உள்ளது. டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளுக்கு மழைப் பொழிவுக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மழை தொடர்ந்தால் அங்கு காற்றின் தரம் சற்று மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு திசையில் ஏற்பட்டுள்ள மாறுபாடு காரணமாக மழை மேகங்கள் உருவாகி, மழை பொழிவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று அதிகபட்சமாக 19 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெப்பநிலை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமாச்சல், ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவு: இமாச்சல் பிரதேசத்தில் ஷிம்லா, மணாலி உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனை சுற்றுலா பயணிகள் கொண்டாடி மகிழ்ந்தனர். இதேபோல ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா, ராம்பன், பதோத் உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவு பதிவானது. அதே நேரத்தில் ஜம்மு நகரம் மற்றும் இமாச்சலின் தரம்சாலாவில் மழை பொழிவு பதிவானது.