தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்!
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.23) ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,600 என உயர்ந்துள்ளது. இதேபோல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அதனால் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் தங்கம் விலை குறைந்து, மீண்டும உயர்கிறது.
தங்கத்தின் மீதான முதலீடு பாதுகாப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது. அதனால் அனைத்து தரப்பு மக்களும் தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்கத்தை அடமானம் வைத்து எளிதில் பணம் பெற முடிவதும், தேவையான நேரத்தில் அதை விற்பனை செய்ய முடிவதும் இதற்கு முக்கிய காரணம். இந்த நிலையில் அண்மையில் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தாண்டியது. அது முதல் தங்கம் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருவது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.23) ஒரே நாளில் கிராமுக்கு ரூ.450 என உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,650-க்கு விற்பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.3,600 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,17,200-க்கு விற்பனை ஆகிறது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.1,27,856-க்கும் விற்பனை ஆகிறது. 18 காரட் தங்கம் பவுன் ரூ.97,760-க்கும் விற்பனை ஆகிறது.
இதேபோல வெள்ளி விலையும் இன்று புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளி கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ரூ.360-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து, ரூ.3,60,000-க்கும் சந்தையில் விற்பனை ஆகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தற்போது ரூ.91.59 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. இத்துடன், சர்வதேச அரசியல் சூழல் பதற்ற நிலை காரணமாக தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால், ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டுள்ளது.