ஒருநாள் தொடரை வெல்லுமா இந்தியா? நியூசிலாந்துடன் நாளை மோதல்

ஒருநாள் தொடரை வெல்லுமா இந்தியா? நியூசிலாந்துடன் நாளை மோதல்

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரை வெல்லும். அதேசமயம் நியூசிலாந்து வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை சமன் செய்யும்.

இந்திய அணி

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அணியின் பேட்டிங்கில் விராட் கோலி, ஷுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். அதேசமயம், பந்துவீச்சில் ஹர்ஷித் ரானா, குல்தீப் யாதவ், பிரஷித் கிருஷ்ணா ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

இதனால் இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இருப்பினும் காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் தொடரில் இருந்து விலகியுள்ளது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் நாளைய போட்டியில் அவரது இடத்தை யார் நிரப்புவார் என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

நியூசிலாந்து அணி

மறுபக்கம் மைக்கேல் பிரேஸ்வெல் தலைமையிலான நியூசிலாந்து அணியும் இறுதிவரை போராடி தோல்வியைத் தழுவியுள்ளது. பேட்டிங்கில் டெவான் கான்வே, ஹென்றி நிக்கோலஸ், டேரில் மிட்செல் ஆகியோரும், பவுலிங்கில் கைல் ஜேமிசன், ஜக்காரி ஃபால்க்ஸ், ஆதித்யா அசோக், கிளென் பிலீப்ஸ் உள்ளிட்டோரும் சிறப்பாக செயல்பட்டு வருவது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் பெரிதளவில் சோபிக்காததுடன், புதுமுக வீரர்கள் பவுலிங்கில் ரன்களை கட்டுப்படுத்த தவறியதுமே அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி தங்களுடைய தவறுகளைத் திருத்தி வெற்றியைப் பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 121 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 63 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதே சமயம் நியூசிலாந்து அணி 50 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், 8 போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.

நிரஞ்சன் ஷா கிரிக்கெட் மைதானம்

ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 7 சர்வதே ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 6 முறையும், சேஸிங் செய்த அணி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

 இந்தியா: ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஹர்ஷித் ரானா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

  • நியூசிலாந்து: டெவன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், வில் யங், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மிட்செல் ஹே, மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஜக்காரி ஃபார்ல்க்ஸ், கிறிஸ்டியன் கிளார்க், கைல் ஜேமிசன், ஆதித்யா அசோக்

அணிகள்

இந்திய ஒருநாள் அணி: ஷுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஆயுஷ் பதோனி, ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ரானா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், துருவ் ஜூரெல், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

நியூசிலாந்து ஒருநாள் அணி: மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஆதித்யா அசோக், கிறிஸ்டியன் கிளார்க், ஜோஷ் கிளார்க்சன், டெவான் கான்வே, ஜக்காரி ஃபால்க்ஸ், மிட்செல் ஹேய், கைல் ஜேமிசன், நிக் கெல்லி, ஜெய்டன் லெனாக்ஸ், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் ரே, வில் யங்.