பாஜகவின் கட்டளைப்படி செயல்படுகிறது தேர்தல் ஆணையம் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
தேர்தல் ஆணையம் பாஜகவின் கட்டளைப்படி செயல்பட்டு வருவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடந்த சில மாதங்களாக வாக்கு திருட்டுக்கு எதிராக நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் தேர்தல் ஆணையத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக குற்றம்சாட்டினார்.
கூட்டத்தின் மத்தியில் பேசத் தொடங்கிய ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள் குறித்த கருத்துக்கு எதிராக பேசினார். “உலகம் உண்மையை பார்ப்பதில்லை, அதிகாரத்தைத்தான் பார்க்கிறது என்று மோகன் பகவத் கூறுகிறார். அதிகாரம் உள்ளவர்தான் அங்கீகரிக்கப்படுகிறார் என்பதே மோகன் பகவத்தின் மனநிலை. அதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தமும்கூட. ஆனால் இது உண்மைக்கு எதிரானது. நம்முடைய சித்தாந்தமே உண்மைக்காகத்தான் நிற்கிறது” என்றார்.
தொடர்ந்து தேர்தல்களில் வாக்கு திருட்டு குறித்து பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தை தாக்கி பேசிய ராகுல் காந்தி, பீகார் தேர்தலில் பெண்களுக்கு ரூ. 10 ஆயிரம் கொடுத்தது குறித்து கேள்வி எழுப்பினார். “பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிபெற்றது. ஆனால் அதற்கு முன்னதாக, தேர்தல் சமயத்தில் அங்குள்ள 75 லட்சம் பெண்களின் வங்கிக்கணக்குகளில் தலா ரூ. 10 ஆயிரம் அனுப்பப்பட்டது ஏன்?
மேலும் ஹரியானா தேர்தலை சுட்டிக்காட்டிய அவர், பிரேசிலை சேர்ந்த ஒரு மாடலின் புகைப்படம் வாக்காளர் பட்டியலில் 22 முறை இடம்பெற்றிருந்தது குறித்து பேசினார். மேலும் ஏற்கனவே இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து விளக்கியதாகவும், ஆனால் இதுவரை தேர்தல் ஆணையத்திடமிருந்து அதற்கான பதில் வரவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
நாட்டில் இப்போது உண்மைக்கும் பொய்க்குமிடையே போராட்டம் நடந்து வருவதாகவும், வாக்கு திருட்டு விஷயத்தில் உண்மையை வெளிக்கொண்டு வந்து விரைவில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை பதவியிலிருந்து விலக்குவோம் என்றும் உறுதியளித்தார்.
ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.