கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மகாராஷ்டிர தேர்தலில் வெற்றி

கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மகாராஷ்டிர தேர்தலில் வெற்றி

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மகாராஷ்டிர மாநில உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிராவில் மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், ஜல்னா நகராட்சிக்குட்பட்ட 13-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட ஸ்ரீகாந்த் பங்கர்கர் என்பவர் 2,621 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ஸ்ரீகாந்த் பங்கர்கர், பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ஆவார். மனித உரிமை செயற்பாட்டாளராகவும், லங்கேசு பத்ரிகே என்ற கன்னட இதழிந் முதன்மை ஆசிரியராகவும் இருந்த கௌரி லங்கேஷ் பிரபல எழுத்தாளர் ராணா அய்யூப் எழுதிய குஜராத் பைல்ஸ் நூலை கன்னடத்தில் மொழி பெயர்த்தவர். முற்போக்கு சிந்தனையில் உறுதியாக இருந்த கௌரி லங்கேஷ், இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்தார்.

இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி கௌரி லங்கேஷ் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அப்போது நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக, இவரது கொலை பத்திரிகை துறை மற்றும் சமுக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் ஸ்ரீகாந்த் பங்கர்கர் என்பவரும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு இந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் இவர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

வெற்றிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீகாந்த் பங்கர்கர், மக்கள் நீதிமன்றத்தில் தனக்கு நீதி கிடைத்துள்ளதாகவும், தன் மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

முன்னதாக இவர் 2001-2006 காலகட்டத்தில் சிவசேனா பிளவுபடாத சமயத்தில் அக்கட்சியின் ஜல்னா நகர் மன்ற உறுப்பினராகவும் இருந்தார். பின்னர் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் சீட் கிடைக்காததால் இந்து ஜனஜக்ருதி சமிதி (HJS) கட்சியில் இணைந்தார். இந்நிலையில், இவர் மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.