“புதின் வருகை இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை பாதிக்காது” - ஜெய்சங்கர்

“புதின் வருகை இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை பாதிக்காது” - ஜெய்சங்கர்

 ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இரண்டு நாள் இந்திய பயணம், நடந்து வரும் இந்தியா - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகளை சிக்கலாக்கும் என்ற கருத்தில் உடன்படவில்லை என வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உறுதியாக தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஜெய்சங்கர், “ புதினின் வருகை இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை பாதிக்கும் என்ற கருத்தில் நான் உடன்படவில்லை. உலகின் அனைத்து முக்கிய நாடுகளுடனும் இந்தியா நல்ல உறவுகளைக் கொண்டுள்ளது. மற்ற நாடுகளுடன் நமது உறவுகளை எவ்வாறு வளர்த்துக் கொள்கிறோம் என்பதை எந்த நாடும் எதிர்பார்ப்பது ஒரு நியாயமான விஷயம் அல்ல. ஏனென்றால் நினைவில் கொள்ளுங்கள், மற்ற நாடுகளும் அதையே உங்களிடம் எதிர்பார்க்கலாம்.

அமெரிக்காவில் ஒவ்வொரு அரசாங்கமும் ஒவ்வொரு அமெரிக்க அதிபரும் உலகை அணுகுவதற்கு ஒரு அணுகுமுறையை கொண்டுள்ளனர். அதிபர் ட்ரம்ப்பின் விஷயத்தில், முன்பு இருந்தவர்களை விடவும் அவரின் அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டது என்பதை நான் உங்களிடம் ஒப்புக்கொள்ள முடியும்.

இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களைத் தொடரும்போது இந்தியாவின் முக்கிய பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதில் மிகவும் விவேகத்துடன் செயல்படுகிறோம். இந்த காலண்டர் ஆண்டிற்குள் ஒரு தீர்வைக் காண வேண்டும் என்று நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்றார்