அதிமுகவில் மீண்டும் இணைந்தது ஏன்? - ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி பரபரப்பு விளக்கம்

அதிமுகவில் மீண்டும் இணைந்தது ஏன்? - ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி பரபரப்பு விளக்கம்

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான தர்மர், எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பிரச்சாரம், வேட்புமனு தாக்கல், நேர்காணல், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என்று தேர்தல் களம் அனல் பறக்கிறது. திமுக கூட்டணி கட்சிகள் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம் எனக் கூறி வருகின்றன. ஒருபுறம் அதிமுக - தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியாகி பிரதமர் மோடி தலைமையில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டமும் நடைபெற்று முடிந்துள்ளது.

ஆனால், தமது அரசியல் நிலைப்பாடு குறித்த முடிவை எடுக்க ஓபிஎஸ் காலதாமதமாக்கி வரும் நிலையில் அவருடன் பயணித்த சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் ஆகியோர் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.

இந்நிலையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், ஓபிஎஸ் ஆதரவாளரான மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.

அதிமுக நிர்வாகிகளுடன் தர்மர்

அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், "தீய சக்தி திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். இன்று என்னோடு ராமநாதபுரம் மாவட்ட அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

நான் அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அதிமுக பொதுச் செயலாளர், வருங்கால முதலமைச்சர் தமிழக மக்களுக்கு பணி செய்ய அம்மாவின் கனவு நிறைவேற வேண்டும். ஓபிஎஸ்க்கும், எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நான் தன்னிச்சையாக எடுத்த முடிவு தான் இது.'' என்று தர்மர் கூறினார்.

ஓபிஎஸ் -சேகர் பாபு சந்திப்பு: முன்னதாக, இன்று மதியம் சட்டப்பேரவை நிகழ்வுகள் முடிவடைந்த பிறகு தமிழக அமைச்சர் சேகர்பாபு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியதாகவும், இந்த சந்திப்பு பேரவைத் தலைவர் அப்பாவு அறையில் 15 நிமிடம் நடந்ததாகவும் தகவல் வெளியானது.

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பலர் திமுகவில் இணைந்து வரும் நிலையில் அமைச்சர் சேகர்பாபு ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்ததாக கூறப்படும் தகவல் தமிழக அரசியலில் முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.