ரவி மோகன் மிரட்டலான நடிப்பில் ’கராத்தே பாபு’ படத்தின் டீசர் வெளியீடு

ரவி மோகன் மிரட்டலான நடிப்பில் ’கராத்தே பாபு’ படத்தின் டீசர் வெளியீடு

ரவி மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ’கராத்தே பாபு’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் ரவி மோகன், நாசர், கே.எஸ்.ரவிக்குமார், சக்தி வாசுதேவன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ’கராத்தே பாபு’. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். அரசியலில் நிகழ்ந்த சம்பவங்களை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. மேலும் இப்படத்தில் தமிழ்நாடு முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தீப்தி ஜிவால் கதாநாயகியாக நடிக்கிறார்.

‎இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ள நிலையில், நேற்று படக்குழு வெளியிட்ட டீசர் அறிவிப்பில், ”இத்திரைப்படத்தில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே, எந்த தனிநபரையும் குறிப்பிடவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தது.

அதன்பின்னர் காளி வெங்கட் கதாபாத்திரம் உங்களுக்கு பாபுவை பற்றி தெரியுமா? என ரவி மோகன் காட்சிகளுக்கு பில்டப் சேர்க்கிறது. ‎இதனைத்தொடர்ந்து ”நீங்கள் எல்லாம் தொழிலாக அரசியலை பார்ப்பவர்கள், ‎நான் அரசியலையே தொழிலாக செய்யக் கூடியவர்” என மிரட்டும் தொனியில் ரவி மோகன் பேசும் வசனங்கள் திரையரங்குகளில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலிருந்து ட்ரெய்லர் சூடு பிடிக்க தொடங்கி சண்டை காட்சிகள் விறுவிறுப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக கணேஷ் கே.பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்த ‘டாடா’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து டாடா பட இயக்குநர் இயக்கும் அரசியல் களம் சார்ந்த படத்தில் ரவி மோகன் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. தற்போது கராத்தே பாபு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. கராத்தே பாபு திரைப்படம் இந்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.