டி20 கிரிக்கெட்: பாகிஸ்தான் சாதனையை முறியடித்து வரலாறு படைத்த இந்தியா

டி20 கிரிக்கெட்: பாகிஸ்தான் சாதனையை முறியடித்து வரலாறு படைத்த இந்தியா

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200க்கும் அதிகமான ரன்களை அதிவேகமாக சேஸிங் செய்த அணி என்ற பாகிஸ்தானின் சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி ராய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரனக்ளைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 47 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 44 ரன்களையும் சேர்த்தனர்.

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 82 ரன்களையும், இஷான் கிஷன் 76 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் இந்திய அணி வெறும் 15.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகித்தது. இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருது இஷான் கிஷனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியின் மூலம் சில சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளன. அதன்படி இப்போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் என்ற இலக்கை எட்டியதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி கூட்டு அதிகபட்ச சேஸிங் என்ற சாதனையை பெற்றுள்ளது. முன்னதாக, கடந்த 2023ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 209 ரன்களை எட்டியதே இந்தியா சேஸிங் செய்த அதிகபட்ச இழக்காக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா சேஸிங் செய்த அதிகபட்ச இலக்குகள் (டி20)

  • 209 vs நியூசிலாந்து, ராய்ப்பூர் 2026
  • 209 vs ஆஸ்திரேலியா, விசாகப்பட்டினம் 2023
  • 208 vs வெஸ்ட் இண்டீஸ், ஹைதராபாத் 2019
  • 207 vs இலங்கை, மொஹாலி 2009
  • 204 vs நியூசிலாந்து, ஆக்லாந்து 2020

பாகிஸ்தானின் சாதனையை முறியடித்த இந்தியா

இதுதவிர சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200க்கும் மேற்பட்ட ரன்களை அதிவேகமாக சேஸிங் செய்த அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்துள்ளது. முன்னதாக கடந்த 2025ஆம் பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 205 ரன்கள் என்ற இலக்கை 16 ஓவர்களில் எட்டியதே சாதனையாக இருந்தது. ஆனால் தற்சமயம் இந்திய அணி 209 ரன்கள் என்ற இலக்கை 15.2 ஓவர்களில் எட்டி புதிய சாதனை படைத்துள்ளது.

200+ ரன்களை வேகமாக சேஸிங் செய்த அணிகள்

  • இந்தியா 15.2 ஓவர்களில் vs நியூசிலாந்து 2026 (இலக்கு: 209)
  • பாகிஸ்தான் 16 ஓவர்களில் vs நியூசிலாந்து 2025 (இலக்கு: 205)
  • ஆஸ்திரேலியா 16.1 ஓவர்களில், vs வெஸ்ட் இண்டீஸ் 2025 (இலக்கு: 215)

மேற்கொண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200+ ரன்களை அதிக முறை எட்டிய இரண்டாவது அணி என்ற சாதனையையும் இந்தியா பெற்றுள்ளது. இந்திய அணி இதுவரை 6 முறை 200+ என்ற இலக்கை எட்டியுள்ளது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 7 முறை எட்டி முதலிடத்திலும், தென்னாப்பிரிக்க அணி 5 முறை எட்டி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிக முறை 200+ ரன்களைத் சேஸிங் செய்த அணிகள்

  • 7 ஆஸ்திரேலியா
  • 6 இந்தியா
  • 5 தென்னாப்பிரிக்கா
  • 4 பாகிஸ்தான்
  • 3 இங்கிலாந்து

இந்நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நாளை கௌகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய அணி முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ள நிலையில், இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.