“அதிகார வெறிபிடித்த சதிகாரர் முகம்மது யூனுஸ்” - ஷேக் ஹசீனா கடும் தாக்கு!
“வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து தன்னை அகற்றுவதற்கான சதியில் தொடர்புடைய அதிகார வெறி பிடித்த தேசவிரோதி முகம்மது யூனுஸ்” என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியுள்ளார்.
வங்கதேசத்தில் வரும் பிப்.12-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அங்கு தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. எனினும், தேர்தலில் போட்டியிட ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில், வங்கதேச தேசியவாத கட்சி ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், ஜமாத் இ இஸ்லாமியும் கணிசமான இடங்களைப் பெறும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு ஷேக் ஹசீனா ஆற்றிய உரையின் ஆடியோ பதிவு, செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் வெளியிடப்பட்டது.
இந்த தேச துரோகி, வெளிநாடுகளுக்குச் சேவை செய்யும் கைப்பாவையாக உள்ளார். இந்த ஆட்சியை எந்த விலை கொடுத்தாவது தூக்கியெறிய வேண்டும். வங்கதேசத்தின் துணிச்சல் மிக்க புதல்வர்களும் புதல்விகளும் தியாகிகளின் ரத்தத்தால் எழுதப்பட்ட அரசியலமைப்பைப் பாதுகாத்து மீட்டெடுக்க வேண்டும். நாம் நமது சுதந்திரத்தை மீண்டும் பெற வேண்டும். நாம் நமது இறையாண்மையை பாதுகாக்க வேண்டும். மேலும், நமது ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும்.
கொலைகார பாசிசவாதி முகம்மது யூனுஸ். அவர் மற்றும் அவரது கும்பலின் நிழல் மக்களிடம் இருந்து அகற்றப்படும்வரை வங்கதேசத்தில் சுதந்திரமான, நியாயான தேர்தல் ஒருபோதும் நடைபெறாது. சட்டவிரோதமாக அவர் நடத்தி வரும் நிர்வாகத்தை அகற்றி, நமது நாட்டின் ஜனநாயகத்தை நாம் மீட்டெடுக்க வேண்டும்.
முகம்மது யூனுஸின் நிர்வாகத்தில் தினசரி வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. நாட்டில் சட்டமின்மை உள்ளது. மக்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மதச் சிறுபான்மையினர், பெண்கள், சிறுமிகள் உள்ளிட்டோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் உத்தரவாதம் இருக்க வேண்டும்.
பத்திரிகையாளர்களையும் அவாமி லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரையும் அச்சுறுத்தும், அமைதியாக்கும், சிறையில் அடைக்கும் அனைத்து அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல்களும் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். நாட்டின் நீதித்துறை மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்.
கடந்த ஆண்டில் நடந்தவை குறித்து புதிய, பாரபட்சமற்ற விசாரணையை ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ள வேண்டும். கொலைகார பாசிசவாதியான முகம்மது யூனுஸ், ஒரு கந்துவட்டிக்காரர், பணமோசடி செய்பவர், கொள்ளையடிப்பவர், ஊழல்வாதி, அதிகார வெறி பிடித்தவர், தேசத்துரோகி. தனது பேராசை காரணமாக, அவர் நமது நாட்டை நாசப்படுத்தி, நமது தாய்நாட்டின் ஆன்மாவை களங்கப்படுத்திவிட்டார்.
ஜனநாயகம் இப்போது நாடு கடத்தப்பட்டுள்ளது. மனித உரிமைகள் காலிப் போட்டு மிதிக்கப்பட்டுள்ளன. பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டுவிட்டது. பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான சித்திரவதை, பாலியல் வன்கொடுமைகள் கட்டுப்படுத்தப்படாமல் உள்ளன. மதச் சிறுபான்மையினர் தொடர்ச்சியான துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. இவ்வாறு அவர் அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளார்.