9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை (ஜன.25) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், தமிழகம் நோக்கி நகரும் கிழக்கு திசை வளிமண்டல அலை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளையும் (ஜன.25) நாளை மறுதினமும் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27 முதல் 30-ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகத்தில் நாளை செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் சென்னை மேடவாக்கம், மாதவரம், பெரம்பூர், மணலி, அடையார், பெருங்குடி, தண்டையார்பேட்டை, மயிலாப்பூர், வேளச்சேரி, அமைந்தகரை, நுங்கம்பாக்கம், அயனாவரம், பள்ளிக்கரணை, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.