தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தான் - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி
அடுத்த 5 ஆண்டும் திராவிட மாடல் ஆட்சி தான் தொடர வேண்டும் என தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த ஜனவரி 20-ம் தேதி துவங்கியது. கூட்டத்தொடரில் இன்று ஆளுநர் உரைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார்.
அப்போது அவர், "தேர்தலில் வெற்றி பெற்று வந்த உடன் ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபக்கம் கவலையாக இருந்தது. மக்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா என்ற கவலை இருந்தது. முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பெரும் பின்னடைவு இருந்தது. அத்தகைய சூழலில்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். ஆனால் 5 ஆண்டுகால ஆட்சியில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மக்கள் மகிழ்சியாக இருப்பதால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
விடியலை ஏற்படுத்துவோம் என கூறினோம். அதேபோல் மக்கள் வாழ்கையில் விடியலை ஏற்படுத்தினோம். 'மகளிர் விடியல் பயணம்' திட்டத்துக்கு தான் முதல் கையெழுத்து போட்டேன்.
இதன் மூலம் பெண்களின் சமூக பொருளாதாரம் உயர்ந்துள்ளது. கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தை பெண்கள் மாதத்தோறும் அண்ணன் கொடுத்த சீர் என கூறினர். பொங்கலுக்கு 3 ஆயிரம் கொடுத்தோம். தமிழக மக்கள் பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடினர், " என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழகம் தற்போது முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எங்களின் சாதனைகளை நாங்கே மிஞ்சும் அளவுக்கு எங்களின் 2.0 ஆட்சி இருக்கும். ஆட்சிக்jg வந்த உடன் அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்தோம்.
கலைஞர் நூற்றாண்டு நூலகம், கிளம்பாக்கம் பேருந்து நிலையம், 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி, கடந்த 5 ஆண்டுகளில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 1.35 லட்சம் கோடி கடன் உதவி, 2 ஆயிரம் கலைஞர் வீடுகள். 4 ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு, 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்பு, 12 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்ப்பு என்று ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
பல்வேறு ஏற்றுமதி பொருட்களிலும் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. நீர் மேலாண்மையில் தமிழகம் 3 வது இடத்தில் உள்ளது. 14 ஆண்டுகளுக்கு பின் மாநிலத்தின் பொருளாதாரம் இரட்டை இலக்க வளர்ச்சி அடைந்துள்ளது.
திராவிட மாடல் அரசின் சாதனையால் தமிழ்நாடு தலை நிமிர்ந்துவிட்டது. தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட வேகமாக வளர்ந்துள்ளது. திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தான் இதற்கு காரணம். கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும். அரசுப் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யும் வகையில் சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டும் திராவிட மாடல் ஆட்சி தான் தொடர வேண்டும் என தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். மீண்டும் உறுதியாக சொல்கிறோம்; நாங்கள் தான் மீண்டும் வருவோம்" என்று ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
தொடர்ந்து ஆளுநரின் செயல்பாடுகளை விமர்சித்து ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், "எங்கள் அரசை பொறுத்தவரை ஒரு சாதனை செய்தால் அதை மிஞ்சும் அளவிற்கு மற்றொரு சாதனை வரும். சாதனைகள் மேல் சாதனை படைப்பது தான் திராவிட மாடல் அரசு. ஆனால் ஆளுநர் அரசுக்கு எதிராக செயல்படுகிறார். ஒரு காரணத்தை திரும்ப திரும்ப கூறி அவையைவிட்டு வெளிநடப்பு செய்கிறார். நான் நாட்டின் மீதும்,தேசிய கீதம் மீதும் அதிக பற்று கொண்டவன். தேசபக்தி குறித்து யாரும் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம். ஆளுநர் செயல் எனக்கு வருத்தம் அளிக்கிறது. சட்டப்பேரவையில் முதலில் தமிழ்தாய் வாழ்த்து, இறுதியில் தேசிய கீதம் வாசிப்பதது தான் மரபு" என்று முதலமைச்சர் தமது உரையில் குறிப்பிட்டார்.