“தமிழகத்தில் எந்த காலத்திலும் பாஜகவால் காலூன்ற முடியாது” - நாராயணசாமி விமர்சனம்
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆளும் அரசின் செயல்பாடுகளை கண்டித்து ‘வாக் ஃபார் புதுச்சேரி’ பாதயாத்திரை தொடங்கியுள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை மாலை புதுச்சேரி - நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் பாதயாத்திரை நடைபெற்றது.
இதில் புதுச்சேரி காங்கிரஸ் பிரதேச தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏ வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். லெனின் வீதியில் உள்ள தனியார் திருமண நிலையம் அருகே தொடங்கிய பாதயாத்திரை தொகுதி முழுவதும் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடியை பொருத்தவரை தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியது போல் ‘இரட்டை எஞ்சின் ஆட்சி அல்ல அது டப்பா எஞ்சின் ஆட்சி’. மோடி சொன்னது எல்லாம் ஒட்டுமொத்த பொய். ஒன்று கூட உண்மையில்லை. தொழிற்சாலை, சட்டம்-ஒழுங்கு, வெளிநாட்டு முதலீடு கொண்டு வருவதில் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது.
அந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக - பாஜக கூட்டணியினர் அவரை விமர்சனம் செய்கின்றனர். தமிழகத்தில் எந்த காலத்திலும், எந்த கொம்பன் வந்தாலும் பாஜகவால் அங்கு காலூன்ற முடியாது. புதுச்சேரி மாநிலத்தில் இனியொரு முறை என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி தலைதூக்க முடியாது. மக்கள் எங்ளோடு இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக அனைத்து மக்களும் எங்களுக்கு ஆதரவு நல்குகிறார்கள். 2026 தேர்தல் காங்கிரஸ் கட்சியின் காலம்.
பிரதமர் மோடி சிறப்பான நடிகர். வாயை திறந்தாலே பொய்தான். அதனால் மோடியை தமிழக, புதுச்சேரி மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கல்வி, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு கொடுக்காமல் தமிழக அரசை மோடி அரசு வஞ்சிக்கிறது.
புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி இருந்தாலும் கூட அவர்களையும் வஞ்சிக்கிறார்கள். மோடி தங்கள் கூட்டணியில் உள்ள ஆளும் கட்சியையும், தமிழக திமுக ஆட்சியையும் விடவில்லை. இவர்களுக்கு மோடி தொல்லை கொடுக்கிறார். என்.ஆர்.காங்கிரஸ் கட்சியால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. முதல்வர் ரங்கசாமி அடிமையாக இருக்கிறார்.
அவர் மக்களுக்கு திட்டத்தை, வேலைவாய்ப்பை கொடுக்கவில்லை. சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தவில்லை. ரெஸ்டோ பார்களை கொண்டு வந்துள்ளார். மக்கள் அவதிப்படுகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ரங்கசாமி மாதந்தோறும் அரிசி போடுவதாக சொன்னார். 5 மாதமாக அரிசி வரவில்லை.
மாதந்தோறும் முதியோர் உதவித்தொகை தருவதாக கூறினார். அது என்னாச்சு என்று தெரியவில்லை. 5, 6 மதங்கள் கழிந்த பின்னரே அவை வருகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அனைத்தையும் காலத்தோடு கொடுத்தோம். ரங்கசாமி, மோடி இருவருமே பொய்யர்கள். இந்த ஆட்சியும் பொய்யர்கள் ஆட்சி என்றார்.