திராவிட மாடல் என்பதை விட ''ட்ரபிள் என்ஜின் மாடல்'' என சொல்லலாம்; தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம்
திராவிட மாடல் ஆட்சி என்பதை விட ''ட்ரபிள் என்ஜின் மாடல்'' என சொல்லலாம் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்து தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியதாவது:
மக்களுக்கு தேவையான அறிக்கையை தயாரிப்பதற்காக திட்டமிட்டு இருக்கிறோம். இதில் மக்களின் பங்களிப்பும் இருக்கும். எல்லா துறைகளை சார்ந்தவர்களையும், எல்லா பகுதி மக்களையும் சந்தித்து தேர்தல் அறிக்கை தயாரிக்க இருக்கிறோம். இதுவரை எந்த அரசியல் கட்சியும் கொடுக்காத தேர்தல் அறிக்கையாக இது இருக்கும். நீங்கள் எங்களை பாராட்டும் அளவிற்கு இது இருக்கும். 2026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று பிரதமர் தெரிவித்திருக்கிறார். அதை நடைமுறைப்படுத்தக் கூடிய வகையிலான தேர்தல் அறிக்கையாக இது இருக்கும்.
டப்பா என்ஜின் கவர்மெண்ட்டை வைத்து என்ன செய்வீர்கள்? என்று முதலமைச்சர் பதிவிட்டுள்ளார். Double இன்ஜின் மட்டுமல்ல. triple இன்ஜின் கவர்மெண்டும் பல மாநிலங்களில் உள்ளது. நீங்கள் ட்ரபிள் என்ஜின் கவர்மெண்டாக இருக்கிறீர்கள். திமுகவை திராவிட மாடல் ஆட்சி என்று சொல்வதைவிட ட்ரபிள் என்ஜின் மாடல் என்று சொல்லலாம். செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மருத்துவர்கள் என அனைவரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அனைத்தையும் மத்திய அரசிடம் இருந்து போராடி பெறுவதாக முதலமைச்சர் சொல்கிறார். மத்திய அரசின் எல்லா திட்டங்களுக்குமான உதவிகளைப் பெற்று விட்டு நாங்கள் போராடி கொண்டிருக்கிறோம் என்கிறார். நீங்கள் உழைக்கவில்லை. லஞ்சம் வாங்கி பிழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். சமூக நீதிக்கு பாதுகாவலன் என்று சொல்கிறார்கள். இன்றை வரை வேங்கை வயல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
செல்வப்பெருந்தகை கேட்க மாட்டார். ஆனால் நான் கேட்கிறேன். திருநெல்வேலி மாவட்ட தலைவர் கொலை செய்யப்பட்டு 3 வருடங்கள் ஆகிவிட்டது. தற்பொழுது வரை குற்றவாளியை கண்டுபிடிக்கவில்லை. விடியல் பயணத்திற்காக கையெழுத்து போட்டேன் என்கிறார். ஆனால், பெண்களின் வாழ்க்கை விடியவில்லை. ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சொல்கிறார்கள். அக்காவிடம் கொடுத்துவிட்டு, அண்ணனிடம் டாஸ்மாக் மூலம் திரும்பி வாங்கி விடுகிறார்கள்.
ஆளுநர் உயர்வான பதவியில் இருப்பவர். அவரை ஒண்டிக் கொண்டு வருவீர்களா என விமர்சனம் செய்யும் அளவிற்கு முதல்வர் நிலையை ஏற்படுத்திவிட்டார். தமிழகத்திற்கு பிரதமர் வந்தால் வரவேற்பது கிடையாது. நிதி ஆயோக் கூட்டத்திற்கும் செல்வது இல்லை. ஆளுநரை மதிப்பதில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும் போது ராஜ்பவன் படியை ஏறிக்கொண்டிருந்தார்கள்.
எத்தனை அமைச்சர்கள் பட்டம் பெறும் அளவிற்கு தகுதியுடன் உள்ளார்கள்? அவர்களின் பட்டியலை வெளியிட்டால் மோசமாகி விடும். ஊழல் பட்டியல், தகுதி இல்லாத அமைச்சர்கள் பட்டியல் வெளியிடலாம். ஆளுநர் தான் வேந்தர். பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை என்றால் உங்களைதான் மாணவர்கள் மதிக்கமாட்டார்கள். உங்கள் கடமையை நீங்கள் தவிர்க்கிறீர்கள் என்று தான் சொல்ல வேண்டும். கருத்துக்களை சொல்ல ஆளுநருக்கு உரிமை உள்ளது.
முதலமைச்சர் சென்று ஆளுநரை சந்திக்கலாம் என்று அரசியலமைப்பில் இருக்கிறது. ஆனால் தேநீர் விருந்தில் கூட அவர்கள் கலந்து கொள்வதில்லை. கம்யூனிஸ்ட் இன்றைக்கு பெட்டி பாம்பாக அடங்கி போயிருக்கிறார்கள். இண்டி கூட்டணி ஒரு அடிமை கூட்டணி. தொழிலாளர்களின் தோழன் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் எங்கே போனார்கள்? காங்கிரஸுக்குள் இருக்கும் சண்டையை தான் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
துப்புரவு தொழிலாளர்களின் பிரச்சனையை தீர்க்கவில்லை என்றால் கூட்டணியில் இருந்து வெளியே வருவோம் என்று சொல்ல சொல்லுங்கள். அந்த தைரியம் கூட அவர்களுக்கு இல்லை. அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். அவர்களுக்கு தொகுதிகள் தான் வேண்டும். விஜயை டெல்லிக்கு வர வைத்தது NDA கூட்டணிக்கு வர வைப்பதற்கு அல்ல. எங்களிடமே விசில் உள்ளது. அதனால் எங்களுக்கு அந்த விசில் தேவையில்லை. குக்கர் விசில் எங்களிடம் உள்ளது. எனவே அதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்.
இதற்கு மேலும் சில கட்சிகள் கூட்டணிக்குள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. திமுக கூட்டணி முழுமையாக இருக்கிறதா என்று தெரியவில்லை. எனவே, இந்த கூட்டணியை பற்றி திருமாவளவன் ஏன் கவலைப்பட வேண்டும்? எங்கள் கூட்டணி முழுமையான கூட்டணி. இண்டி கூட்டணி தான் முழுமையடையாத கூட்டணி. அவர்கள் உள்ளே புழுங்கி கொண்டு இருக்கிறார்கள்; என்றைக்கு வெடிக்கும் என்று தெரியாது என்று தமிழிசை சௌந்தர்ராஜன் கூறினார்.