வங்கதேசத்துக்கு மாற்றாக டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் ஸ்காட்லாந்து: ஐசிசி அறிவிப்பு
அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு மாற்றாக ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணி பங்கேற்கும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்குகிறது. 20 அணிகள் கலந்துகொள்ளும் இந்தத் தொடரில் வங்கதேச அணி ‘சி’ பிரிவில் இடம்பெற்றிருந்தது. அந்த அணியின் லீக் ஆட்டங்கள் கொல்கத்தா, மும்பையில் நடைபெற இருந்தது. இந்நிலையில், இந்தியாவில் தங்களது அணிக்கு பாதுகாப்பு இருக்காது என்றும், இந்த தொடரில் தங்கள் அணி விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என ஐசிசியிடம் வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது.
ஆனால் வங்கதேசத்தின் குற்றச்சாட்டு மீது எந்தவித உண்மையும் இல்லை. வங்கதேச அணிக்கு இந்தியாவில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என ஐசிசி தெரிவித்தது. போட்டி தொடங்குவதற்கு சில வாரங்களே உள்ளதால் அட்டவணை, பயண விவரங்களை மாற்ற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
மேலும், வங்கதேச அணியின் இடமாற்ற கோரிக்கையை பரிசீலிக்க ஓட்டெடுப்பும் நடத்தப்பட்டது. அதில் வங்கதேச அணியின் கோரிக்கைக்கு 16 ஐசிசி உறுப்பினர்களில் 14 நாடுகள் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க காலக்கெடு விதித்தது ஐசிசி. இந்த சூழலில் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கள் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு பயணிக்காது என வங்கதேச அரசு தெரிவித்தது.
இதையடுத்து இந்த தொடரில் வங்கதேசத்துக்கு மாற்றாக ஸ்காட்லாந்து அணி பங்கேற்கும் என ஐசிசி அறிவித்துள்ளது. இதனால் இப்போது ‘சி’ பிரிவில் மேற்கு இந்தியத் தீவுகள், நேபாளம், இங்கிலாந்து, இத்தாலி அணிகளுடன் ஸ்காட்லாந்து அணி பங்கேற்று விளையாட உள்ளது. ஐசிசியின் இந்த நகர்வுக்கு கலவையான விமர்சனங்கள் கிரிக்கெட் வட்டாரத்தில் எழுந்துள்ளன.