ரவுடி வெள்ளை காளி பயணித்த காவல் துறை வாகனத்தின் மீது வெடிகுண்டு வீச்சு; சினிமா பாணியில் சம்பவம்
பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி முன், ரவுடியை அழைத்து வந்த போலீஸ் வாகனத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி, மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதில் 2 போலீசார் காயம் அடைந்தனர். இதற்கிடையே போலீசார் மீது குண்டு வீசிய கும்பலின் காரை பறிமுதல் செய்துள்ளதாக திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரையை சேர்ந்தவர் பிரபல ரவுடி காளி (எ) வெள்ளை காளி. இவர் மீது 9க்கும் மேற்பட்ட கொலை, 8க்கும் மேற்பட்ட கொலை முயற்சி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திண்டுக்கல் சிறையில் இருந்த இவரை வழக்கு விசாரணைக்காக புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு பலத்த பாதுகாப்புடன் போலீசார் இன்று நண்பகல் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடிக்கு முன்பாக சாலையோர உணவகம் ஒன்றில் ரவுடி காளி மற்றும் போலீசார் உணவு சாப்பிட்டதாக தெரிகிறது. அப்போது இரண்டு கார்களில் வந்த 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென இறங்கி, ரவுடி வெள்ளை காளியை அரிவாளால் வெட்ட முற்பட்டது. அப்போது போலீசாருக்கும், கும்பலுக்கும் இடையே மோதல் நடந்துள்ளது.
அப்போது அந்த கும்பல் நாட்டு வெடிகுண்டை வீசியதை அடுத்து போலீசார் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றபோது அந்த ரவுடி கும்பல் தப்பியோடியுள்ளது. தகவலறிந்ததும் மங்கலமேடு போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த ராமச்சந்திரன், மருதுபாண்டியன், வினேஷ் உள்ளிட்ட போலீசாரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி அனிதா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் ரவுடி கும்பல் வீசி சென்ற நாட்டு வெடிகுண்டு குறித்து வெடிகுண்டு மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
பிரபல ரவுடி காளியை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து வந்த போலீசார் பலத்த பாதுகாப்புடன் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். கண் இமைக்கும் நேரத்தில் சினிமா காட்சி போல் அரங்கேறிய இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
5 தனிப்படைகள் அமைப்பு: இந்நிலையில் வெடிகுண்டு தாக்குதலில் காயம் அடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காவலர்களை திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதன் பிறகு ஐஜி பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ''ரவுடி வெள்ளை காளியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காவல்துறை பாதுகாப்பில் அழைத்து வரப்பட்ட அவரை பின்தொடர்ந்து வந்து கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட கும்பலின் காரை கடலூர் அருகே பறிமுதல் செய்துள்ளோம். திட்டக்குடி அடுத்த எழுத்தூரில் காரை நிறுத்திவிட்டு மற்றொரு காரில் தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதல் நடத்திய கும்பலை 5 தனிப்படைகள் அமைத்து, தொடர்ந்து தீவிரமாக தேடி வருகிறோம்” என்று தெரிவித்தார்.