திமுகவுடன் சுமூக பேச்சுவார்த்தை - தொகுதிப் பங்கீடு குறித்து மநீம மகிழ்ச்சி

திமுகவுடன் சுமூக பேச்சுவார்த்தை - தொகுதிப் பங்கீடு குறித்து மநீம மகிழ்ச்சி

திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக சுமூகமான, நேர்மையான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் கூறியுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிட உள்ள ம.நீ.ம கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம், ஏற்கனவே இருந்த டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமான ம.நீ.ம மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் கட்சி சார்பாக போட்டியிட விரும்புவோர்களுக்கான விருப்ப மனு விநியோகம் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. விருப்ப மனுக்கான கட்டணமாக ரூபாய் 50,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கூட்டத்தில், மக்கள் நீதி மய்யத்தின் துவக்க தினமான வரும் பிப்ரவரி 21ஆம் தேதி மதுரையில் "ரிமெம்பரிங் பாபுஜி" எனும் பெயரில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் அறிஞர்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்று கலந்துரையாட உள்ளனர். இந்த பொதுக்கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் சிறப்பாக ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் பணிகள் தொடர்பாகவும், தேர்தலில் எத்தனை சட்டமன்ற தொகுதிகளை திமுகவிடமிருந்து கேட்டு பெறலாம் என்பது குறித்தும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நிர்வாகிகளிடம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக வரும் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் இரட்டை இலக்க சட்டமன்ற தொகுதிகளை திமுகவிடமிருந்து கேட்டு பெற திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாச்சலம், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் பங்களிப்பை திமுக அங்கீகரித்து வருகிறது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வலுப்படுத்தவே கமல்ஹாசன் திமுகவுடன் இணைந்து பயணிக்கிறார். சுயநலவாதிகள் திமுக கூட்டணியில் இல்லை.
கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பம் மனுவை நானே வழங்கி உள்ளேன்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக சுமூகமான, நேர்மையான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை முழுமை பெறும்போது போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை தெரியவரும். நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் சுயநலவாதிகள் கலந்து கொண்ட கூட்டம். திமுக கூட்டணி 200 சட்டமன்றத் தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறும்” எனக் கூறினார்.