கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
நண்பரை கட்டையால் அடித்துக் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரைச் சேர்ந்த மீனவர் சுரேஷ்(27). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாரும் (23) நண்பர்கள். இருவருக்குமிடையே பணம், கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்தது.
கடந்த 2015-ம் ஆண்டு பிப்.6 அன்று உணவகம் முன்பாக நின்று கொண்டிருந்த இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது. ஆத்திரமடைந்த சதீஷ்குமார் கட்டையை எடுத்து சுரேஷின் தலையில் அடித்தார்.
இதில் படுகாயமடைந்த சுரேஷ் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக காசிமேடு போலீஸார் வழக்குப்பதிந்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கு சென்னை 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கே.கீதாராணி முன்பாக நடந்தது. போலீஸ் தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் டி.சுரேஷ் ஆஜராகி வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட சதீஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.