"ராகுல் காந்தியை தவிர நான் யாரையும் சகோதரர் என்று அழைத்தது இல்லை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் ராகுல் காந்தியை தவிர நான் யாரையும் சகோதரர் என்று அழைத்தது இல்லை. அவரும் என்னை எப்போதும் ’மை டியர் பிரதர்’ என்று தான் அழைப்பார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஸ்ரீராஜா சொக்கர் மகனின் திருமண விழா சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இதன் பின்னர் மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “1967-க்கு முன்பு சீர்திருத்த, சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டப்படி அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. ஆனால், 1967 ஆம் ஆண்டு அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியில் தான் சுயமரியாதை திருமணங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “திமுக-வும், காங்கிரஸ் பேரியக்கமும் ஒரு காலத்தில் வெவ்வேறு பாதைகளில் பயணித்திருந்தாலும், இன்று நாட்டின் நன்மை, ஒற்றுமை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஒரே அணியில், ஒரே சிந்தனையுடன் பயணித்துக் கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவராக விளங்கிக் கொண்டிருக்கக் கூடிய சகோதரர் ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் என் மீது காட்டுகின்ற அன்பை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாது.
மற்ற அரசியல் கட்சித் தலைவர்களுடன் பேசுகின்ற போது, சந்திக்கின்ற போது யாரையும் நான் சகோதரர் என்று சொன்னது கிடையாது. ஆனால், ராகுல் காந்தியை பற்றி நான் பேசும் போது அருமை சகோதரர் என்று சொல்வதுண்டு. இதற்கு காரணம் என்னவென்றால், அவர் என்னை அண்ணன் என்று அழைப்பார். நேரடியாக பார்த்தாலும், என்னிடம் தொலைபேசியில் பேசுகின்ற போதும் சரி, என்னை எப்போதும் ’மை டியர் பிரதர்’ என்று தான் சொல்லுவார். அதை என்னால் மறக்க முடியாது.
இந்த அளவுக்கு அரசியல் நட்பு மட்டுமல்லாமல், கொள்கை உறவாகவும் வலுப்பெற்று, இந்தியாவின் குரலாக இன்றைக்கு எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்த உணர்வை தான் நாங்கள் அனைவரிடமும் எதிர்பார்க்கிறோம்.
தனிமனிதர்களுடைய நலன்களை விட நாட்டின் நலன் தான் முக்கியம் என்ற உணர்வோடு, அந்த நட்புணர்வு இன்றைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. திமுக - காஸ்கிரஸ் ஆகிய இரண்டு அரசியல் இயக்கங்களுக்கும் இடையே ஏற்பட்டிருக்கின்ற இந்த புரிதலும், கொள்கை உறவும் நிச்சயம் இந்த நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்றுவது உறுதி“ என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.