ஈரானில் தீவிரமடையும் போராட்டம்.. இணைய சேவை நிறுத்தம்.. டிரம்பின் எச்சரிக்கை
ஈரான் நாட்டில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் அரசுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுடன் கடந்த வருடம் ஏற்பட்ட போர் காரணமாக ஈரான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் கடந்த 3 வருடங்களில் இல்லாதளவுக்கு ஏராளமான பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. பணத்தின் மதிப்பு குறைந்து, பொருளாதார மந்த நிலை அதிகரித்தது. இதைக் கண்டித்து கடந்த 2025 டிசம்பர் 28 ஆம் தேதி முதல் ஈரான் மக்கள் போராட்டத்தை தொடங்கினார்கள்.
பதற்றத்தின் பின்னணி" ஈரான் மக்கள் போராட்டம் டெஹ்ரானில் மக்கள் அலை அலையாக போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். வன்முறை வெடித்ததில் தற்போதுவரை சுமார் 45க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சுமார் 2,260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசின் நிர்வாகமின்மை, தவறான கொள்கை முடிவுகள் ஆகியவற்றை கண்டித்தும், அரசியல் மற்றும் சமூக சுதந்திரத்தை வலியுறுத்தியும் நாடு முழுவதும் போராட்டம் வலுபெற்று வந்தது. ஈரான் நாட்டு அதிபர் மசௌட் பெஸஷ்கியன், "மிகுந்த கட்டுப்பாட்டுடன் போராட்டத்தை கடைபிடிக்க வேண்டும். வன்முறையை எந்த வகையிலும் ஏற்க முடியாது" என்று கூறியுள்ளார்.
இதனிடையே, "போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கொலை செய்தால் ஈரான் அரசு மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். "வாஷிங்டன்னில் இருந்து கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
டிரம்புக்கு பதிலடி இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, "அமெரிக்கா அல்லது இஸ்ரேலுடன் போரில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் டெஹ்ரான் இல்லை. ஆனால் எங்களை குறிவைத்தால் பதிலடி கொடுப்போம்" என்று எச்சரித்துள்ளார். ஈரான் போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பதாகவும் ஈரான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதன் காரணமாக அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது.