செங்கோட்டையனை புகழ்ந்து தள்ளிய ஓபிஎஸ்.. தவெக கூட்டணியா?
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் கட்சித்தாவலில் ஈடுபடும் சூழலில் , தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனுக்கு முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து அனுப்பியுள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் அமைப்பை நடத்தி வரும் ஓபிஎஸ், அதனை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என அண்மையில் மாற்றினார். கடந்த 2024 லோக்சபா தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்த ஓபிஎஸ், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்நிலையில், சட்டசபை தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி அமைந்துள்ள நிலையில் ஓபிஎஸ்ஸை, கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை. ஓபிஎஸ்ஸை சேர்க்க வாய்ப்பில்லை என பல முறை கூறிவிட்டேன் என நேற்றும் உறுதி செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. பாஜகவும் ஓபிஎஸ்ஸை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து பாஜக கூட்டணியில் இல்லை என ஓபிஎஸ் தரப்பினர் அறிவித்தனர். அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர். வரும் 14ஆம் தேதி ஓபிஎஸ் தனது பிறந்தநாளில் கூட்டணி நிலைப்பாடு, தனிக்கட்சி தொடங்குகிறாரா? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனிக்கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு, தவெகவுடன் கூட்டணி அமைக்கலாமா? என்பது குறித்து ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வம் தங்களுடன் பேசி வருவதாக தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறி இருந்தார். தவெக உடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் விஜய் கட்சியில் சேர்ந்தனர். மேலும், ஓபிஎஸ் ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏக்கள் சுப்புரத்தினம், பாலகங்காதரன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் பலம் குறைந்துகொண்டே வரும் நிலையில், அடுத்து ஓபிஎஸ் என்ன செய்யப்போகிறார், தேர்தல் கூட்டணி யாருடன் என்பது அறிவிக்கப்படுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்தச் சூழலில் தான், செங்கோட்டையனை ஏகத்துக்கும் வாழ்த்தி ஒரு பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ஓபிஎஸ். "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் அரசியலில் ஈர்க்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டவரும், ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், போக்குவரத்து, வனம், வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், வருவாய், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் போன்ற இலாக்காக்களின் அமைச்சராக திறம்பட பணியாற்றியவரும், மூத்த அரசியல்வாதியும், தமிழக வெற்றிக் கழகத்தின் உயர்மட்ட நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான எனது அருமை சகோதரர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ்ந்து, மக்கள் சேவையாற்றவும், அவருடைய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
இதன் மூலம் ஓபிஎஸ், தவெக உடன் கூட்டணியா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.