இந்தியாவில் நீர் பஞ்சத்தை உருவாக்கும் சீனா? பிரம்மபுத்திரா நதியில் "நீர் வெடிகுண்டு!" பகீர் தகவல்
வட இந்தியாவில் ஓடும் மிக முக்கிய நதிகளில் ஒன்றானபிரம்மபுத்திரா நதியில் சீனா மிகப் பெரிய ஒரு நீர் மின் திட்டத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
சீனா யர்லுங் சாங்போ நதியில் மிகப் பெரிய ஒரு அணையைக் கட்டுகிறது. இதனால் இந்தியாவுக்குப் பாதிப்புகள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. எங்கோ சீனா அணையைக் கட்டுவதற்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.
இந்த யர்லுங் சாங்போ நதி தான் இந்தியாவில் பிரம்மபுத்திரா நதியாகப் பாய்கிறது.
புனல் மின்சாரத்திற்காக யர்லுங் சாங்போ நதியில் சீனா கட்டும் இந்த அணை உலகின் மிகப் பெரிய கட்டுமான திட்டங்களில் ஒன்றாக இருக்கும். அதேநேரம் இதனால் இந்தியா மற்றும் அண்டை நாடுகளுக்கு, குறிப்பாகப் பிரம்மபுத்திரா படுகையில் உள்ள மக்களுக்குப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இந்த நதி திபெத்தில் இருந்து உருவாகி, இந்தியா வழியாக வங்கதேசத்திற்குச் செல்கிறது. இந்தப் பகுதியில் வாழும் பல கோடி மக்களுக்கு வாழ்வாதாரமாகத் திகழும் பிரம்மபுத்திரா நதி, விவசாயம், மீன்பிடித்தல் மற்றும் அன்றாட நீர்த் தேவைகளுக்கு ஆதாரமாக உள்ளது.
இந்த நதியின் மேற்படுகையில் செய்யப்படும் மாற்றங்கள், நதியின் இயற்கையான ஓட்டத்தை மாற்றக்கூடும் எனவும், அதன் விளைவுகள் இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். $168 பில்லியன் மதிப்பில் கட்டப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், 2000 மீட்டர் செங்குத்தான உயரப் பள்ளத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கச் சீனா திட்டமிட்டுள்ளது. கிரீன் எனர்ஜிக்காக இதைத் திட்டமிட்டுள்ளதாகச் சீனா கூறினாலும், இதனால் பூர்வகுடி மக்களின் வாழ்விடங்கள் பாதிக்கப்பட்டும் என்றும், சுற்றுச்சூழலின் சமநிலையைச் சீர்குலையும் என்றும் எச்சரிக்கின்றனர்.
அணைகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் எனச் சிக்கலான வலையமைப்பைக் கொண்டதாக இதைத் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக வாஷிங்டனில் உள்ள ஸ்டிம்சன் மையத்தின் எரிசக்தி இயக்குநர் பிரையன் எய்லர் கூறுகையில், "உலகம் இதுவரை கண்டிராத மிகவும் அதிநவீனத் திட்டம்.. அதேநேரம் இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அதேநேரம் இந்தத் திட்டத்தால் பல ஆபத்துகளும் ஏற்படலாம்" என்றார். இவர் மட்டுமின்றி பல்வேறு வல்லுநர்களும் இதுபோன்ற எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.
சீனாவின் பதில் ஆனால், இதை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. நீண்ட கால ஆய்வுக்கு பிறகே இந்தத் திட்டத்தை உருவாக்கியுள்ளதா சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.. நதியின் வழித்தடத்தில் மேற்பகுதிகளில் செய்யப்படும் கட்டுமானம் கீழ்மட்டப் பகுதிகளைப் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்யப் பொறியியல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனச் சீன அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை இதன் விளைவுகள் தீவிரமானவை. பிரம்மபுத்திரா நதியின் மேல் பகுதிகளில் நீர் ஓட்டத்தை எந்த விதத்தில் மாற்றியமைத்தாலும் அது இந்தியாவைப் பாதிக்கலாம்.. வண்டல் மண் நகர்வு, மீன் இடம்பெயர்வு மற்றும் பருவகால வெள்ள அபாயம் ஆகியவை ஏற்படும் ஆபத்து உள்ளன. இவை அனைத்தும் விவசாயத்திற்கும், இங்கு வாழும் விலங்கு மற்றும் நீர் வாழ் உயிரினங்களுக்கும் முக்கியமானவை.
பிரம்மபுத்திராவைப் பொறுத்தவரை அதன் நீரின் பெரும்பகுதியைப் பருவமழை மற்றும் இந்தியாவிற்குள் உள்ள துணை நதிகளிலிருந்தே பெறுகிறது. இதனால் சீனாவின் அணையால் நீர் மொத்தமாக நின்றுவிடும் எனச் சொல்ல முடியாது. இருப்பினும்,நீரோட்டம் பாதிக்கப்படுவதால் மேலும் பல பாதிப்புகள் ஏற்படலாம். பிரம்மபுத்திரா நதிப் படுகையில் வசிக்கும் வங்கப்புலிகள், மேகச் சிறுத்தைகள், கருங்கரடிகள் மற்றும் சிவப்பு பாண்டாக்களும் கூட இதனால் பாதிக்கப்படலாம். புவிசார் அரசியல் மேலும், புவிசார் அரசியல் ரீதியாகவும் இது முக்கியத்துவம் பெறுகிறது.
இமயமலையில், குறிப்பாக இந்தியா சீன எல்லையில் அமைந்துள்ள திபெத் பகுதிகளில், சீனா தொடர்ந்து உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி வருவதாகவும் திபெத் மற்றும் அதன் எல்லைகளில் தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்தவே சீனா இதைச் செய்வதாகவும் வல்லுநர்கள் கூறுகிறார்கள். மேலும், எதிர்காலத்தில் இந்தியாவுக்கு எதிராக இதை ஒரு வாட்டர் பாம்மாக கூட சீனா பயன்படுத்தலாம் என்கிறார்கள். அதாவது எதிர்பாராத நேரத்தில் திடீரெனச் சீனா நீரைத் திறந்துவிட்டால் இந்தியாவில் மிக மோசான பாதிப்பு ஏற்படும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இது தொடர்பாகச் சீனாவின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக இந்திய கூறுகிறது. இந்தியர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று உறுதியளித்துள்ளனர்.