புதிய இஸ்லாமிய நாடு உதயம்.. ‛சோமாலிலாந்தை' முதல் நாடாக அங்கீகரித்த இஸ்ரேல்.. முழு பின்னணி
இந்திய பெருங்கடல் அருகே இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வரும் சோமாலிலாந்தை இஸ்ரேல் தனிநாடாக அங்கீகரித்துள்ளது.
சோமாலிலாந்தை இன்னும் எந்த நாடுகளும் அங்கீகரிக்காத நிலையில் இஸ்ரேல் முதல் முறையாக அதனை செய்துள்ளது. இதற்கு சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இதுதான் தற்போது சர்வதேச அரசியலில் ‛டாக் ஆப் தி டவுன்' ஆக உள்ளது. மேலும் சோமாலிலாந்தை அங்கீகரித்ததன் பின்னணியில் இஸ்ரேல் போடும் மெகா திட்டம் குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள முக்கியமான நாடுகளில் ஒன்று சோமாலியா. இந்த நாட்டின் ஒரு பகுதியில் இந்திய பெருங்கடல் உள்ளது. இன்னொரு புறம் செங்கடல் உள்ளது. இந்த 2 கடல்களும் கப்பல் போக்குவரத்துக்கு முக்கியமான ஒன்றாகும். இந்நிலையில் தான் சோமாலியாவின் ஒரு பகுதியாக இருந்த சோமாலிலாந்து தனி நாடு கோரியது.
சோமாலிலாந்து ஏடன் வளைகுடாவில் அமைந்துள்ளது. இதனால் அது முக்கியமான பகுதியாகும். இதனால் சோமாலியா, சோமாலிலாந்தை தனி நாடாக்க விரும்பவில்லை. இதனால் சோமாலியாவில் இருந்து பிரிந்த சோமாலிலாந்து தனி பிரதேசமாக செயல்பட்டு வருகிறது. 1991-ல் சோமாலியாவிலிருந்து பிரிந்து தன்னாட்சியுடன் சோமாலிலாந்து செயல்பட்டு வருகிறது. சோமாலிலாந்து மக்கள் தங்களை தனி நாடாக அறிவித்து கொண்டனர். சோமாலியா பசி, பட்டினி, வறுமையில் தவித்து வந்தாலும் கூட சோமாலிலாந்து மக்கள் சிறப்பான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
இங்குள்ள மக்கள்தொகையில் 99 சதவீதம் பேர் சன்னி இஸ்லாமியர்களாக உள்ளனர். அரபு மொழியை தான் மக்கள் பேசி வருகின்றனர். இந்த சோமாலிலாந்தின் எல்லையாக இப்போது வடமேற்கு பகுதியில் டிஜிபோட்டி நாடும், தெற்கு மற்றும் மேற்கில் எத்தியோப்பியாவும், கிழக்கில் சோமலியாவும் உள்ளது. இன்னொரு புறம் செங்கடல் உள்ளது. செங்கடலை தாண்டினால் ஏமன் அமைந்துள்ளது.
இதனால் சோமாலிநாந்து முக்கிய இடமாக பார்க்கப்படுகிறது. சோமாலிலாந்துடன் பிரிட்டன், துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், டென்மார்க், தைவான் உள்ளிட்ட நாடுகள் தூதரகம் ரீதியிலான உறவை பேணி வந்தாலும் கூட தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில் தான் சோமாலிலாந்தை முதல் நாடாக இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டார். சோமாலிலாந்தை சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாகும். அந்த நாட்டின் கல்வி, சுகாதாரம், விவசாய துறை மேம்பாட்டுக்கு உதவுவதாகவும் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் சோமாலிலாந்து அதிபர் அப்திர் ரஹ்மான் முகமது அப்துல்லாஹியிடம் பேசியிருந்தார்.
இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வெளியுறவுத்துறை அமைச்சர் கிடியான் ஸார் மற்றும் சோமாலிலாந்து அதிபர் அப்துர்ரஹ்மான் முகமது அப்துல்லாஹி ஆகியோர் பரஸ்பர அங்கீகார ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த நடவடிக்கை ஆபிரகாம் ஒப்பந்தத்துக்கு இணங்குவதாகவும், இதுபற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் இதை விவாதிப்பதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஆபிரகாம் ஒப்பந்தம் என்பது யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் என மூன்று மதங்களிலும் முக்கிய தீர்க்கதரிசியாக கருதப்படும் ஆபிரகாம் பெயரில் உள்ள ஒப்பந்தமாகும். இது கடந்த 2020ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய இஸ்ரேல், ஐக்கிய அமீரகம், பஹ்ரைன் இடையேயான அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் வழியாக இஸ்ரேல் இஸ்லாமிய நாடுகளுடன் உறவை சுமூகமாக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் தான் ஆபிரகாம் ஒப்பந்தம் அடிப்படையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.