இரான் ஏவுகணை, டிரோன் மூலம் இஸ்ரேலை தாக்கிய இரவில் என்ன நடந்தது? அமெரிக்க போர் விமானிகளின் அனுபவம்

பல தசாப்தங்கள் பதற்றம் நிலவி வந்த நிலையில், இரான் முதல் முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலை நடத்தியது.
அந்த ஆண்டு ஏப்ரலில் சிரிய தலைநகர் டமாஸ்கஸில் இரானிய தூதரகத்தை இஸ்ரேல் தாக்கியிருந்தது. இதில் இரான் புரட்சிகர காவலர் படையின் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டனர். டமாஸ்கஸ் தூதரக தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஏப்ரல் 13-ஆம் தேதி இஸ்ரேல் மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக இரான் தெரிவித்தது.
இரான் இந்த நடவடிக்கைக்கு "உண்மையான வாக்குறுதி" என்று பெயரிட்டதுடன், 'இஸ்ரேல் மீதான அதன் தாக்குதல் மக்களைக் கொல்லும் நோக்கம் கொண்டதல்ல, மாறாக பதிலடி கொடுக்கும் தனது திறனை நிரூபிப்பதற்கான சான்று' என்று எச்சரித்தது.
சில இரானிய ஏவுகணைகள் இஸ்ரேலில் உள்ள தங்கள் இலக்குகளைத் தாக்குவதில் வெற்றி பெற்றன, ஆனால் ராணுவக் கண்ணோட்டத்தில் இந்த நடவடிக்கை மிகவும் வெற்றிகரமானதாக பார்க்கப்படவில்லை.
அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையகத்தின் (US Central command) கூற்றுப்படி, அமெரிக்கப் படைகள் அன்றிரவு 80 க்கும் மேற்பட்ட இரானிய டிரோன்களையும் ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் இடைமறித்து அழித்தன.
அமெரிக்க விமானப்படை அதன் யூடியூப் சேனலில் 'டேஞ்சரஸ் கேம்' (ஆபத்தான விளையாட்டு) என்ற தலைப்பில் ஓர் ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. இது எஃப் -15 இ ஸ்ட்ரைக் ஈகிள் விமானிகளின் கண்ணோட்டத்தில் அந்த இரவின் கதையைச் சொல்கிறது.
அந்த ஆவணப்படம் அமெரிக்க ராணுவத்தின் கண்ணோட்டத்தில் அந்த இரவில் நடந்த நிகழ்வுகளை சித்தரிக்கிறது. 36 நிமிட படம் சில பிரசார அம்சங்களையும் கொண்டுள்ளது.
எனினும், இந்த ஆவணப்படம் இரான் தாக்குதலின் ராணுவ மற்றும் உளவியல் விளைவுகள் மற்றும் அன்றிரவு அமெரிக்கப் படைகள் எதிர்கொண்ட அழுத்தங்களையும் சிரமங்களையும் விவரிக்கிறது.