முல்லை பெரியாற்றில் இழுத்து செல்லப்பட்ட தம்பதியை தேடும் பணி தீவிரம்
முல்லை பெரியாற்றில் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட கணவன் ,மனைவியை தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர் கேம்ப் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (50) மற்றும் கணேஸ்வரி (46) தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில், மகளுக்கு திருமணமாகி பெண் குழந்தை ஒன்று உள்ளது. மேலும், சங்கர் பால் வியாபாரம் மற்றும் கால்நடைகளுக்குத் தேவையான புல் விற்பனை வியாபாரத்தையும் செய்து வருகிறார்.
இந்த நிலையில், லோயர் கேம்ப் குருவனூத்து பாலம் அருகே மதுரை மாநகராட்சி கூட்டுக் குடிநீர் திட்ட தடுப்பணை பகுதியில் சங்கரும், கணேஸ்வரியும் புல் அறுப்பதற்கான சென்றுள்ளனர். அப்போது, எதிர் கரையில் அவரது மகள் குழந்தையுடன் வந்துள்ளார். அதனைக் கண்ட சங்கர், பேத்தியை அழைத்து வருவதற்காக இக்கரையில் இருந்து அக்கரைக்கு ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து சென்றுள்ளார்.
பேத்தியை அழைத்துக் கொண்டு வந்தபோது, நீரின் ஓட்டத்தில் தடுமாறியை சங்கர் கீழே விழுந்ததால், தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைக் கண்ட அவரது மனைவி கணேஸ்வரி சிறிதும் தாமதிக்காமல், ஆற்றில் குதித்து, சங்கரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அதைப் பார்த்த அங்கிருந்த இளைஞர் ஒருவர், உடனடியாக ஆற்றுக்குள் குதித்து குழந்தையை மட்டும் முதலில் காப்பாற்றியுள்ளார். அதற்குள் கணவர் மனைவி இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். நீண்ட நேரம் முயற்சி செய்தும் அவரை கண்டு பிடிக்க முடியாததால், உடனடியாக குமுளி போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர்.
அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் கம்பம் தீயணைப்புத் துறையினர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சங்கர் மற்றும் அவரது மனைவி கணேஸ்வரியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீரின் ஓட்டம் அதிகமாக இருந்ததால், முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் குறைக்கப்பட்டு அவர்களை தேடல் பணியில் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.