இளவட்டக்கல் போட்டியில் அசத்தல்... தெலங்கானாவில் பரிசுகளை வென்ற நெல்லை பெண்கள்!

இளவட்டக்கல் போட்டியில் அசத்தல்... தெலங்கானாவில் பரிசுகளை வென்ற நெல்லை பெண்கள்!

தெலங்கானா மாநிலம் தாடிபத்திரி பகுதி மக்கள் தெலுங்கு வருடப் பிறப்பின் போது அங்கு நடத்தப்படும் இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் திருநெல்வேலி பெண்களை பங்கேற்க அழைத்தனர்.

அதன்படி கடந்த மூன்று ஆண்டுகளாக வடலிவிளை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தெலங்கானாவில் நடைபெறும் இளவட்டக்கல் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்து வருகின்றனர். குறிப்பாக கடந்தாண்டு அங்கு நடைபெற்ற போட்டியில் முதல் மூன்று பரிசுகளையும் இவர்கள் தட்டிச் சென்றனர்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 2 வாரங்கள் மட்டுமே இருப்பதால், தற்போது வடலிவிளை கிராமத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் இடவட்டக்கல் தூக்கும் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த பயிற்சியை நேரில் பார்க்க ஈடிவி பாரத் ஊடகக் குழு வடலிவிளை சென்றது.

அங்கு ஊருக்கு நடுவே உள்ள மைதானத்தில் ஆண்கள் ஆர்வமுடன் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அங்கு 45 கிலோ, 60 கிலோ, 90 கிலோ, 100 கிலோ, 115 கிலோ என சைஸ்வாரியாக இளவட்டக் கற்கள் வைக்கப்பட்டிருந்தன. பெண்களும் ஆர்வமுடன் இளவட்டக் கல் தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருவதை பார்க்க முடிந்தது.

இது குறித்து தெலங்கானா மாநிலத்தில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற ராஜகுமாரி நம்மிடம் கூறுகையில், "எங்கள் ஊரில் பொங்கல் விளையாட்டு சிறப்பாக இருக்கும். இந்த வீர விளையாட்டை பார்ப்பதற்கு வெளியூரில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள், பெண்கள் அனைவரும் விளையாடுவோம். இது பாரம்பரிய விளையாட்டு என்பதால் அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்வதற்காக நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.

தெலங்கானா மாநிலத்திற்கு சென்று நாங்கள் விளையாடினோம். அங்கு முதல் மூன்று பரிசுகளை பெற்றோம். அங்குள்ள மக்கள் எங்களை மிகவும் ஆச்சரியமாக பார்த்தார்கள். அங்கு 100 கிலோ எடையுள்ள கல்லை தூக்கினோம். தற்போது பொங்கல் பண்டிகை முன்னிட்டு நாங்கள் பயிற்சி எடுத்து வருகிறோம்" என்றார்.

இது குறித்து கல்லூரி மாணவி லெஜின் கூறுகையில், "நான் கல்லூரி படித்துக் கொண்டே பளு தூக்கும் போட்டியில் பல மாவட்டங்களில் சென்று வெற்றி பெற்றிருக்கிறேன். எங்கள் ஊரில் ஆண்கள் மட்டுமே இளவட்டக்கல் தூக்கி வந்தனர். அதை பார்த்து எங்களுக்கும் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, தற்போது நாங்களும் இள வட்டக்கல் தூக்கி வெற்றி பெற்று வருகிறோம்.

இளவட்டக் கல் என்றால் ஆண்கள் மட்டுமே தூக்குவார்கள் என்பதை மாற்றி பெண்களும் போட்டிகளில் பங்கேற்று வருகிறோம். பெண்களாலும் இதில் சாதிக்க முடியும் என்று நிரூபித்து காட்டி விட்டோம். ஆரம்பத்தில் ஊரில் ஒரு மாதிரி பார்த்தார்கள். ஆனாலும் நாங்கள் உரிய பயிற்சிக்கு பிறகு போட்டியில் வெற்றி பெற்றோம். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். போட்டியில் பங்கேற்க ரொம்பவே ஆர்வமாக இருக்கிறேன். எங்களை பார்த்து பிற பெண்களும் போட்டியில் பங்கேற்கிறார்கள்" என்றார்.

பெண்களின் சாதனையைப் பார்த்து பெருமைப்படுகிறோம்

மேலும், ரெஜின்சன் என்ற இளைஞர், "இந்த விளையாட்டை நாங்கள் பாரம்பரியமாக விளையாடி வருகிறோம். கடந்த ஆண்டு 115 கிலோ எடையுள்ள கல்லை தூக்கினேன். இந்த ஆண்டு அதை விட கூடுதல் எடை கல்லை தூக்குவதற்கு கடந்த 20 நாட்களாக பயிற்சி எடுத்து வருகிறேன். எங்கள் ஊரைச் சேர்ந்த பெண்கள் வெளி மாநிலம் சென்று சாதித்திருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்" என்றார்.

இளவட்டக் கல் போட்டிக்கு ஏற்பாடு செய்து வரும் சுந்தர் கூறுகையில், "ஆரம்பத்தில் எங்கள் ஊரில் இளைஞர்கள் வீரத்தை வெளிப்படுத்தும் விதமாக இதில் பங்கேற்றனர். நாளடைவில் இது ஒரு போட்டியாக மாறிவிட்டது. பாரம்பரிய விளையாட்டு என்பதால் நமது பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகை அன்று இந்த போட்டியை நடத்தி வருகிறோம்.

29 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊரில் இந்த விளையாட்டு தொடங்கியது. முதலில் ஐந்து முதல் ஆறு பேர் மட்டுமே பங்கேற்றனர். தற்போது 60 பேர் வரை இப்போட்டியில் பங்கேற்கின்றனர். இதை பார்த்து விட்டு பெண்களும் ஆர்வமாக பங்கேற்றார்கள். சாதாரண கல்லை இளவட்டக்கலாக மாற்ற முடியாது. இதற்காக மலையில் இருந்து கரும்பாறையை எடுத்து வந்து எடைக்கு ஏற்றாற் போல் செதுக்கி இளவட்டக் கல்லை உருவாக்குகிறோம்" என்று கூறினார்.