அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு இபிஎஸ் புது உத்தரவு
சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சியினருடன் ஒருங்கிணைந்து பணியாற்றி அனைத்து தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளருடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் அதிமுகவின் அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை துவங்கிவிட்டனர். தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் தேர்தல் வியூகம் அமைப்பது, குறிப்பாக வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணி ஆற்றுவது, தேர்தல் பிரச்சாரம் துவங்குவது, அதிமுக தலைமையிலான கூட்டணியை வலுப்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தியாதாக கூறப்படுகிறது.

மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனுவை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், அது தொடர்பாக கேட்டறிந்தார். சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பரிந்துரைகளையும், எடப்பாடி பழனிசாமியிடம் மாவட்டச் செயலாளர்கள் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும், அதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து மாவட்ட செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி இந்த ஆலோசனை கூட்டத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில் அதில் பொதுமக்கள், விவசாயிகள், தொழில் முனைவோர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்று தங்களின் கோரிக்கைகளை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் அதிமுகவினரின் ஒரு வாக்கு கூட விடுபட்டு விட கூடாது என்றும், ஐடி விங் ஊழியர்களும் தங்களது பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அதிமுக மாவட்ட செயலாலர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கட்டளையிட்டதாகவும் கூறப்படுகிறது.