குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் மின் வாகன சார்ஜிங் வசதி கட்டாயம் - தமிழ்நாடு அரசு
குடியிருப்பு மற்றும் வணிக இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் என விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மைச் செயலாளர் அரசு இதழில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், '' தமிழ்நாடு அரசு, குடியிருப்பு மற்றும் வணிக இடங்களில் மின்சார வாகனங்களுக்கான (EV) சார்ஜிங் வசதி கட்டாயம் என ஒருங்கிணைந்த கட்டட வளர்ச்சி விதிகளில் திருத்தம் செய்துள்ளது. இதன் மூலம், புதிய குடியிருப்புகள், வணிக மற்றும் தொழிற்சாலை வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் EV சார்ஜிங் வசதி அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், மாசைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு, ஒருங்கிணைந்த கட்டட வளர்ச்சி விதிகளில் திருத்தம் செய்து இந்த புதிய கட்டாய விதியை வெளியிட்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகள், வணிக இடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவன வளாகங்கள் ஆகியவற்றில் மின்சார வாகன சார்ஜிங் மையங்களை அமைக்க வேண்டும்.
மின்சார வாகனப் பயன்பாட்டை அதிகரித்தல், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதல் மற்றும் மாசைக் குறைப்பதை அரசு நோக்கமாக கொண்டுள்ளது. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையால் செய்யப்பட்ட தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் 2019 இல் திருத்தங்களைக் கொண்டுள்ளது. இந்தத் திருத்தங்கள் முதன்மையாக பல்வேறு வகையான கட்டடங்களில் மின்சார வாகன (EV) சார்ஜிங் உள்கட்டமைப்பை வழங்குவதை ஊக்குவிக்கிறது. குடியிருப்பு, வணிக, தொழில்துறை மற்றும் நிறுவன கட்டடங்களில் மின்சார வாகன சார்ஜிங் மையங்களைச் சேர்ப்பதை கட்டாயமாக்குகின்றன.
50க்கும் மேற்பட்ட குடியிருப்பு அலகுகளைக் கொண்ட குடியிருப்பு கட்டடங்களுக்கு, ஒவ்வொரு கார் மற்றும் இரு சக்கர வாகன நிறுத்துமிடத்திற்கும் சார்ஜிங் செய்யும் வசதி ஏற்படுத்த வேண்டும். 300 சதுர மீட்டருக்கு மேல் தரை இட குறியீட்டு பரப்பளவைக் கொண்ட வணிக, தொழில்துறை மற்றும் நிறுவன கட்டடங்கள், அவற்றின் பார்க்கிங் இடங்களில் குறைந்தது 10 சதவீதம் மின்சார வாகனங்களுக்காக ஒதுக்க வேண்டும். மேலும் வேகமான சார்ஜிங் மையமாக இருக்க வேண்டும்.'' என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.