டிட்வா புயல்: நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துங்கள் - அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
மழையால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பணிகளை முடிக்கி விட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
டிட்வா புயலின் தாக்கத்தினால், தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்தது. மேலும், புயலால் 56 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழலில், சென்னை தலைமை செயலகத்தில், டிட்வா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், அதற்கான நிவாரணப் பணிகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் சேதமடைந்தது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், தமிழ்நாட்டில் டிட்வா புயல் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் 33 விழுக்காட்டிற்கும் மேல் ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் கணக்கெடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கான நிவாரணம் வழங்குவது குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். மழையால் பொது மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் பணிகளை முடிக்கி விடவும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.
டிட்வா புயல் எங்குள்ளது?
டிட்வா புயலானது, இன்று காலை தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும், அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்காள விரிகுடா, வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் தென் ஆந்திரக் கரைகள் மேற்பகுதியிலும் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது சென்னை கரையோரத்திலிருந்து கிழக்கு-தென்கிழக்கில் 50 கிமீ தூரத்தில், புதுச்சேரியிலிருந்து வடகிழக்கில் 130 கி.மீ, கடலூரிலிருந்து வடகிழக்கில் 150 கி.மீ, ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து தென்-தென்கிழக்கில் 200 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையம் வட தமிழ்நாடு-புதுச்சேரி கரையிலிருந்து குறைந்தபட்சம் 40 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் தென் ஆந்திரப் பிரதேசக் கரைகளுக்கு மெதுவாக வட திசையில் நகர்ந்து, வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை மட்டும் அல்லாமல் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற மழை தொடர்பான நடவடிக்கைகள் குறித்த முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர் சாய்குமார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா, பேரிடர் மேலாண்மை ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் தட்சிணாமூர்த்தி, வேளாண்மை இயக்குநர் முருகேஷ், தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை இயக்குநர் குமரவேல் பாண்டியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.