"என் மீது தப்புதான்.. மன்னிச்சிடுங்க" கரூரில் உயிரிழந்த நபரின் அக்காவிடம் உருக்கமாக பேசிய விஜய்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினரிடம் விஜய் பேசிய போது, அவர் மன்னிப்பு கோரியது தெரிய வந்துள்ளது. தம்பியை பறிகொடுத்த பெண் ஒருவரிடம் விஜய் பேசுகையில், உங்கள் இழப்பு தாங்க முடியாதது.. என்னை தம்பியாக நினைத்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ள விஜய், என் மீது தப்புதான்.. என்னை மன்னிச்சிடுங்க.. வர முடியாத சூழலில் போயிட்டேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.
செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 11 குழந்தைகள் உட்பட பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கரூரில் தவெக தொண்டர்கள் உயிரிழந்தது தெரிந்த போதும், விஜய் உடனடியாக சென்னை பறந்தார்.
அவர் மட்டுமல்லாமல் தவெகவின் எந்தவொரு நிர்வாகியும் அன்றைய நாளில் கரூர் மருத்துவமனைக்கு வரவில்லை. அடுத்த நாளில் நடந்த இறுதி சடங்கிலும் பங்கேற்கவில்லை. மாறாக முதல்வர் ஸ்டாலின் நள்ளிரவிலேயே கரூர் வந்தார். அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் மறுநாள் காலையிலேயே வந்தனர். ஆனால் தவெக தலைவர் விஜய் 3 நாட்களுக்கு பின் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்த விவகாரத்தில் திமுக மீது தவெகவினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், ஒவ்வொரு ஆதாரமாக திமுக வெளியிட்டுக் கொண்டே இருந்தது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகளை அவர் நேரடியாக எதிர்கொண்டு பதில் அளித்தார். ஆனால் தவெகவினர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரினர். ஆதவ் அர்ஜுனா கலவரத்தை தூண்டிவிடும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
கரூர் விவகாரம் நிகழ்ந்து 10 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், தவெக தலைவர் விஜய் தரப்பில் இருந்து ஒரு வருத்தமோ, மன்னிப்போ கூட தெரிவிக்கப்படவில்லை. இதனிடையே சென்னை உயர்நீதிமன்றமும், தவெக மற்றும் விஜய்யை கடுமையாக சாடியது. இந்த நிலையில் கரூரில் பாதிக்கப்பட்ட 33 குடும்பங்களிடம் வீடியோ கால் மூலமாக விஜய் பேசி இருப்பது தெரிய வந்துள்ளது.
அதில் தம்பியை இழந்த அக்கா ஒருவரிடம் விஜய் பேசும் போது, மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதில் விஜய் பேசுகையில், உங்களின் இழப்பு தாங்க முடியாதது.. என்னை உங்களின் தம்பியாக நினைத்துக் கொள்ளுங்கள்.. என் மீது தப்புதான்.. என்னை மன்னிச்சிடுங்க.. வர முடியாத சூழலில் போயிட்டேன்.. கரூர் வருவதற்கு அனுமதி கிடைத்ததும் உங்களை வந்து சந்திக்கிறேன் என்று பேசி இருக்கிறார்.
தவெக வழக்கறிஞர் கரூரில் இறந்துபோனது வேறு யாரோ என்றெல்லாம் பேசி சர்ச்சையை உருவாக்கினார். ஆனால் விஜய் ஒரு வழியாக 10 நாட்களுக்கு பின் பாதிக்கப்பட்டவர்களிடம் வீடியோ கால் மூலமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதேபோல் விரைவில் கரூர் வருவதோடு மட்டுமல்லாமல், விஜய் மற்றும் தவெக தரப்பு பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்திற்கான பணிகளை செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.