தீபாவளி விடுமுறை நீட்டிக்கப்படுமா? தமிழக அரசு முடிவு என்ன?

தீபாவளி விடுமுறை நீட்டிக்கப்படுமா? தமிழக அரசு முடிவு என்ன?

வெளியூர் சென்று திரும்பும் மக்களின் பயண நெருக்கடியை குறைக்கும் வகையில், தீபாவளிக்கு கூடுதலாக ஒருநாள் லீவ் விட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது. இதனை அரசு பரிசீலித்து வருவதாகவும், அக்.21 சிறப்பு விடுமுறை அளிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக வெளியூர் பயணத் திட்டங்களில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. விடுமுறை தொடங்குவதற்கு முந்தைய நாளான அக்டோபர் 17 (வெள்ளிக் கிழமை) இரவு முதல் லட்சக்கணக்கான மக்கள் பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மூலம் சொந்த ஊர்களுக்குப் புறப்படுவார்கள்.

விடுமுறை முடிந்து திரும்புவதற்கு அக்டோபர் 20 (திங்கள் கிழமை) இரவு அதிகளவில் பயணிக்கத் திட்டமிட்டுள்ளதால், பேருந்துகள் மற்றும் ரயில்களில் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று, டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்துள்ளன. கடைசி நேரத்தில் திட்டமிடுபவர்களுக்கு டிக்கெட் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியைக் கருத்தில் கொண்டும், பண்டிகையை முடித்து ஊர் திரும்புவோரின் சிரமத்தைக் குறைக்கவும், தீபாவளிக்கு கூடுதலாக ஒரு நாள் விடுமுறை விட வேண்டும் என்ற கோரிக்கை அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வலுத்துள்ளது.

இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்து வருவதாகவும், அதிகபட்சமாக ஒரு நாள் மட்டுமே கூடுதலாக விடுமுறை விடப்பட வாய்ப்புள்ளதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த ஒரு நாள் விடுமுறை, அக்டோபர் 21 (செவ்வாய்க்கிழமை) அன்று விடப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. வழக்கம்போல், கூடுதல் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வேறொரு நாளை தமிழக அரசு வேலை நாளாக அறிவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அக்டோபர் 21-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டால், வெளியூர் சென்று திரும்புபவர்களின் சிரமம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காகக் காத்திருக்க வேண்டி உள்ளது.

முன்னதாக, தீபாவளியை முன்னிட்டு அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் போனஸ் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது: குரூப் சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் இவர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படுகிறது. வீட்டு வசதி வாரியம், குடிநீர் வாரியம் உள்ளிட்ட வாரியத் தொழிலாளர்களுக்கு 10% போனஸ் அளிக்கப்படுகிறது. நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு ரூ.3,000 கருணைத் தொகை வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது