'வெளிநாடுகளை போல் இயந்திரங்கள் மூலம் பால் கறக்க நடவடிக்கை' - அமைச்சர் மனோ தங்கராஜ்

'வெளிநாடுகளை போல் இயந்திரங்கள் மூலம் பால் கறக்க நடவடிக்கை' - அமைச்சர் மனோ தங்கராஜ்

வெளிநாடுகளில் இயந்திரங்களின் மூலம் பால் கறப்பதைப் போல், தமிழ்நாட்டிலும் அது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

ஆண்டு தோறும் நவம்பர் 26 ஆம் தேதி 'உலக பால் தினம்' கொண்டாடப்பட்டு வரும் சூழலில், பால்வளத்துறை சார்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் இன்று (நவ.22) நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த இந்நிகழ்வில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், "மதுரை மற்றும் தேனி ஆவின் பால் கூட்டுறவுச் சங்கங்கள் நல்ல லாபத்தில் இயங்கி வருகின்றன. அதே போல, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பால் கூட்டுறவுச் சங்கங்களும் லாபத்தில் இயங்கக்கூடிய நிலைக்கு வந்துள்ளன.

மதுரை ஆவின் லாபத்தில் இயங்கியதால் பால் விவசாயிகளுக்கு லிட்டருக்கு 1 ரூபாய் ஊக்கத்தொகையும், தீவனம் கிலோவிற்கு 2 ரூபாயும் மானியமாக வழங்கப்பட்டது. ஆவின் பொருட்கள் விற்பனையிலும், கூடுதலாக 50,000 லிட்டர் கொள்முதலில் மதுரை ஆவின் சாதித்துள்ளது. பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்காக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பால் கொள்முதலில் 16 சதவீதமாக இருந்த புரதச்சத்து தற்போது 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பால் கொள்முதலில் விவசாயிகளுக்கு தோராய விலை வழங்கப்பட்ட நிலையில், பாலின் தரத்துக்கு ஏற்ப விலையும் வழங்கப்படுகிறது. பாலின் தரத்தை அறிய தமிழ்நாடு முழுவதும் 10,450 இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இயந்திரங்கள் வாயிலாக பாலின் தரத்தை துல்லியமாகக் கணக்கிட்டு, பாலுக்கான விலை வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களுக்கு பாலின் தரம் அறியும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.‌ இன்னும் ஓரிரு இடங்களில் இயந்திரங்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, பால் கறப்பதற்கு தரமான இயந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். தரம் குறைந்த இயந்திரங்களைப் பயன்படுத்துவதால், மாட்டிற்கு உடல்நலக் குறைவு ஏற்படும். வெளிநாடுகளில் பால் கறப்பது முற்றிலுமாக இயந்திர மயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழ்நாட்டிலும் இயந்திரங்களை கொண்டு பால் கறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

மேலும் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், "ஆவினுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அப்படி கொள்முதல் செய்யப்படும் அனைத்து பொருட்களையும் ஆய்வகத்தில் வைத்து அதன் தரத்தை பரிசோதனை செய்கிறோம்.

அந்த வகையில், கொள்முதல் செய்யப்பட்ட வெண்ணெய்யில் ஒரு பகுதியில் லேசான துர்நாற்றம் வந்தது. துர்நாற்றம் வீசிய வெண்ணெய் உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், திருப்பி அனுப்பப்பட்ட வெண்ணெய்க்கு எந்த ஒரு பணமும் வழங்காததால், ஆவினுக்கும் இழப்பு ஏற்படவில்லை. தொடர்ந்து, வடமாநிலங்களிலிருந்து வெண்ணெய் கொள்முதல் செய்யப்பட்டதில் ஐ.ஏ.எஸ் அதிகாரி உடனடி விசாரணை நடத்தினார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலையில் தனியார் நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து பாலை கொள்முதல் செய்கின்றன.

ஆனால், ஆவின் நிறுவனம் நிலையான விலையில் விவசாயிகளிடமிருந்து பாலை கொள்முதல் செய்கிறது. பால் கொள்முதலில் ஆவின் நிறுவனம் விவசாயிகளுக்கு 7 முதல் 10 நாட்களுக்குள் பாலுக்கான பணத்தை வங்கிகள் வாயிலாக வழங்கி வருகிறது" என்றார்.