ராஜஸ்தானில் லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்து: 15 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தானில் லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்து: 15 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பாரத் மாலா விரைவுச் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது டெம்போ டிராவலர் வேன் மோதியதில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜோத்பூரில் இருந்து 220 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோயில் ஒன்றுக்கு டெம்போ டிராவலரில் திரும்பிக் கொண்டிருந்த போது, இந்த கோர விபத்து நிகழ்ந்திருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதிவேகமாக வந்த வேன், சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதியுள்ளது. இதில் வேன் முற்றிலுமாக உருக்குலைந்தது.

சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில், அங்கு வந்த போலீஸார் வேனுக்குள் சிக்கியிருந்த உடல்களையும், காயம் அடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடல்கள் நொறுங்கிய வாகனத்தின் சீட்களுக்கு இடையே சிக்கி இருந்ததால் மீட்புப் பணியில் கடும் சிரமம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து இரங்கல் செய்து வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளார்.