“வந்தே மாதரம்... ஜெய் ஹிந்த்...” - பிறந்த நாளில் சோனியா காந்தி பகிர்வு
பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி தனது பிறந்த நாள் செய்தியாக, “ வந்தே மாதரம்... ஜெய் ஹிந்த்...” என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவருமான சோனியா காந்தி இன்று தனது 79-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளை காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், பல்வேறு தலைவர்களும் சோனியா காந்திக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவருக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக உறுதியுடன் போராடிய அவர், தைரியம், தியாகம், தன்னலமற்ற அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொண்டு கருணையின் அடையாளமாக திகழ்கிறார். அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தியிடம் பிறந்த நாளை முன்னிட்டு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு சோனியா காந்தி, “வந்தே மாதரம்... ஜெய் ஹிந்த்...” என குறிப்பிட்டார்.
வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை முன்னிட்டு அது குறித்த விவாதம் நேற்று மக்களவையிலும், இன்று மாநிலங்களவையிலும் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் அரசை விமர்சித்து பேசி இருந்தனர். இந்நிலையில், சோனியா காந்தி தனது பிறந்த நாள் செய்தியாக, “வந்தே மாதரம்... ஜெய் ஹிந்த்...” என கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.